நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி விளையாடிய ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுக்காக 503 ரன்கள் சேர்த்து பின்ச், கார்ட்டர்ஸ் சாதனை நிகழ்த்தினர்.
நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. 29-ம் தேதி சிட்னி பிளாக்டவுன் பார்க்கில் தொடங்கிய 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணியின் தொடக்க வீரர்கள் 503 ரன்கள் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் பிட்ச் மோசமடைந்ததன் காரணமாக இந்த பயிற்சி ஆட்டம் 503/1 என்ற நிலையில் கைவிடப்பட்டது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியின் கார்ட்டர்ஸ் மற்றும் அதிரடி வீரர் ஏரோன் பின்ச் ஆகியோர் மட்டரகமான பேட்டிங் பிட்சில் தொடக்க விக்கெட்டுக்காக 503 ரன்களைச் சேர்த்தனர்.
இதில் ஏரோன் பின்ச் 363 பந்துகளில் 24 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 288 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். ரயான் கார்ட்டர்ஸ் 364 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் எடுத்து ஸ்கோர் 503-ஆக இருந்த போது லாதம் பந்தில் அவுட் ஆனார்.
நியூஸிலாந்து அணியினர் 10 பவுலர்களை பயன்படுத்தினர். ஆனாலும் பயனில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே 14 முறை 10 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் வாட்லிங் தவிர அனைவரும் பந்து வீசினர், மொத்தம் 121.1 ஓவர்கள் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் 1 விக்கெட்டையே நியூஸிலாந்தால் வீழ்த்த முடிந்தது.
இந்த சாதனை பற்றிய சில புள்ளி விவரங்கள்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் அதன் சொந்த மண்ணில் 503 ரன்கள் எந்த விக்கெட்டுக்காகவும், எந்த ஒரு கிரிக்கெட்டிலும் சேர்ப்பது இதுவே முதல்முறை.
டிசம்பர் 1990-ல் மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் இணைந்து மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நியுசவுத்வேல்ஸ் அணிக்காக 464 ரன்களை குவித்தது முந்தைய ஆஸ்திரேலிய சாதனையாகும்.
முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் பின்ச், கார்ட்டர்ஸ் சேர்த்த 503 ரன்கள் 4-வது மிகப்பெரிய ஜோடி ரன்களாகும்.
1923-ம் ஆண்டு தொடக்க வீரர்கள் எட்கர் மேய்ன், பில் போன்ஸ்போர்ட் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்காக 456 ரன்கள் சேர்த்தனர். அது தற்போது முறியடிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக முதல் தர கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்காக அதிக ரன்களைச் சேர்த்த சாதனை பாகிஸ்தானிய வீரர்களான வாஹீத் மிர்சா மற்றும் மன்சூர் அக்தரைச் சாரும், இவர்கள் 1977-ல் 561 ரன்களைச் சேர்த்தனர். இதுதான் இன்னும் சாதனையாக நீடிக்கிறது.
கடைசியில் விக்கெட்டை வீழ்த்திய லாதம், இதற்கு முன்னர் முதல் தர கிரிக்கெட்டில் 7 பந்துகளையே வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.