விளையாட்டு

ஜூலை 2013-க்குப் பிறகு தோனி ஆட்ட நாயகன்; கோலியின் தொடர்ச்சியான பேட்டிங் தோல்விகள்

இரா.முத்துக்குமார்

இந்தூர் ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் இந்திய முன்வரிசை வீரர்கள் சொதப்பினாலும் தோனி கடைசி வரை நின்று சதத்துக்கு அருகில் வந்தார், பந்துவீச்சு கட்டுக்கோப்பாக அமைய, குறைந்த இலக்கை நிர்ணயித்த பிறகு ஒரு அரிய வெற்றியைப் பெற்றது இந்திய அணி.

இந்த ஆட்டம் பற்றிய சில சுவையான புள்ளி விவரங்கள் இதோ:

2013 ஜூலைக்குப் பிறகு தோனி, ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை நேற்று இந்தூர் வெற்றிப் போட்டியில் பெற்றார். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் அன்று குறைந்த இலக்கைத் துரத்திய போது 9 விக்கெட்டுகளை சடுதியில் இழந்த இந்திய அணியை நின்று பிறகு கடைசி ஓவரில் 16 ரன்களை விளாசி வெற்றி பெறச் செய்த தோனி அன்று ஆட்ட நாயகன் விருது பெற்றார், அதன் பிறகு தற்போது பெற்றுள்ளார்.

20 ஆட்ட நாயகன் விருதைப் பெற்று விராட் கோலியுடன் சமன் செய்துள்ளார் தோனி. மேலும் சச்சின், கங்குலி, யுவராஜ், சேவாக் ஆகிய அதிக ஆட்ட நாயக விருது பெற்ற வீரர்கள் வரிசையில் இணைந்தார் தோனி.

தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் கோலி அரைசதம் எட்டவில்லை. இந்த இன்னிங்ஸ்களில் கோலியின் சராசரி 27. இதற்கு முன்னதாக ஒரு முறை 7 இன்னிங்ஸ்கள் அரைசதம் எடுக்காமல் கோலி இருந்துள்ளார். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சதத்துக்குப் பிறகு கோலியின் ஸ்கோர்: 46,33 நாட் அவுட், 33, 44 நாட் அவுட், 38, 3, 1,1, 23, 25, 11, 12.

நேற்று அக்சர் படேல் 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஒருநாள் போட்டிகளில் அக்சர் படேலின் சிறந்த பந்து வீச்சு, இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு ஐதராபாத்தில் 3/40 எடுத்துள்ளார்.

இந்தியாவில் ஏ.பி.டிவில்லியர்ஸின் கடைசி 9 ஒருநாள் போட்டிகளின் சராசரி 146.6, ஸ்ட்ரைக் ரேட் 121. இந்த 9 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள், இதில் 4 நாட் அவுட் சதங்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.

SCROLL FOR NEXT