சிட்னியில் நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தின் இளம் வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
காயம் அடைந்த உமேஷ் யாதவுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி அறிமுக வீரராக நாளை களமிறங்குகிறார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸி.யும், மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் இந்திய அணியும் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. ஏற்கெனவே காயம் காரணமாக முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் விலகிய நிலையில் அணிக்குள் ஷர்துல் தாக்கூர், நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஆனால், நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் ஷர்துல் தாக்கூர், நவ்தீப் ஷைனி, நடராஜன் இதில் 3 பேரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதில் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி அறிமுகமாகிறார். ஷர்துல் தாக்கூர், நடராஜன் ஆகிய இருவரும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெறவில்லை.
கடந்த இரு டெஸ்ட் போட்டிகளாக ஃபார்ம் இல்லாமல் தவித்த மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா அணிக்குள் வந்துள்ளார். ரோஹித் சர்மா, ஷூப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்குவார்கள்.
இந்திய அணி விவரம்:
அஜின்கயே ரஹானே (கேப்டன்) ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷூப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் ஷைனி, ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகமது சிராஜ்.