விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: ஒற்றைக் கண் புலி

பி.எம்.சுதிர்

21 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று, மிக இளம் வயதில் அணித் தலைவரான இந்தியர் என்ற சாதனையைப் படைத்த மன்சூர் அலிகான் பட்டோடியின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 5).

செல்வச் செழிப்புமிக்க பட்டோடி ராஜகுடும்பத்தில் 1941-ம் ஆண்டில் பிறந்த மன்சூர் அலிகான், இளவயதில் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார். 150 அறைகள், மைதானங்கள், குதிரை லாயங்கள் கொண்ட அவரது அரண்மனையில் 100-க்கும் மேற்பட்ட வேலைக்காரர்கள் இருந்தனர். இதில் மன்சூர் அலிகான் பட்டோடியை கவனிப்பதற்கென்றே 8 வேலைக்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அலிகார் மற்றும் டேராடூனில் பள்ளிப் படிப்பை முடித்த பட்டோடி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

படிக்கும் காலத்திலேயே கிரிக்கெட் ஆர்வம் கொண்டவராக விளங்கிய பட்டோடி, 1957-ம் ஆண்டுமுதல் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்தார். 1961-ம் ஆண்டில் ஜூலை மாதம் நடந்த ஒரு விபத்தில், பட்டோடி தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். இதைத்தொடர்ந்து அவரால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என்றுதான் பலரும் கருதினர். ஆனால் தனது தன்னம்பிக்கையால் அதைப் பொய்யாக்கிய பட்டோடி, அதே ஆண்டில் டிசம்பர் மாதம் இந்தியாவுக்காக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடினார்.

இந்தியாவுக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பட்டோடி, ஒரு கண்ணை வைத்துக்கொண்டே 2,793 ரன்களைக் குவித்தார். கிரிக்கெட் உலகில் டைகர் என செல்லமாக அழைக்கப்பட்ட பட்டோடி 2011-ம் ஆண்டு காலமானார். கண்களின் முக்கியத்துவத்தை அறிந்தவராக இருந்ததால், இறப்புக்கு பிறகு தனது ஒரு கண்ணை தானமாக வழங்க வேண்டும் என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.

SCROLL FOR NEXT