பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அரசியலில் சேரக் கோரி அதிகமான நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு சனிக்கிழமை காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கங்குலியின் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாகத் தெரிவித்து ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய இருப்பதாகத் தெரிவித்தனர். அடுத்தகட்ட சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய 9 மருத்துவர்கள் கொண்ட குழு இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.
இதற்கிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் மேற்கு வங்க ஆளுநர் தினகரைச் சந்தித்து கங்குலி பேசினார். இதனால் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அவர் பாஜகவில் சேர்வார் எனத் தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த கங்குலி, அரசியலில் சேரும் திட்டம் ஏதும் இல்லை, எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அது வதந்தி எனத் தெரிந்தார்.
இந்நிலையில் சவுரவ் கங்குலிக்கு மிகவும் நெருக்கமானவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் பட்டாச்சார்யா நேற்று மருத்துவமனைக்குச் சென்று கங்குலியை நலம் விசாரித்தார்.
அதன்பின் பட்டாச்சார்யா நிருபர்களிடம் கூறுகையில், “கங்குலியை அரசியலில் சேரக் கூறி சிலர் அவருக்கு அதிகமான அழுத்தம் கொடுத்துள்ளார்கள். அரசியல் ரீதியாக கங்குலியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். இது கங்குலிக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம். கங்குலி அரசியலில் ஈடுபடுபவர் அல்ல. கங்குலியை விளையாட்டு வீரராகத்தான் அறிவார்கள், அறியப்பட வேண்டும்.
கங்குலியை அரசியலில் சேரக் கூறி அழுத்தம் கொடுக்கக் கூடாது. கடந்த வாரம் கங்குலி என்னிடம் பேசியபோதுகூட நான் அவரிடம், அரசியலுக்கு வராதீர்கள், அரசியலில் சேரக்கூடாது எனத் தெரிவித்தேன். அதற்கு கங்குலி என் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
அசோக் பட்டாச்சார்யா கருத்துக்குப் பதில் அளித்த மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், “சிலர் நோயுற்ற மனநிலையால், ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பேசுகிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்களின் வேண்டுதலும் கங்குலி குணமாக வேண்டும் என்பதுதான்” எனத் தெரிவித்தார்.