1990 உலகக் கோப்பை கால்பந்து போட்டி இத்தாலியில் ஜூன் 8 முதல் ஜூலை 8 வரை நடைபெற்றது. இதன்மூலம் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக இருமுறை உலகக் கோப்பையை நடத்திய நாடு என்ற பெருமையைப் பெற்றது இத்தாலி.
இந்தப் போட்டியின் தகுதிச்சுற்றில் 6 கண்டங்களைச் சேர்ந்த 116 அணிகள் பங்கேற்றன. அதில் இருந்து 22 அணிகள் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. போட்டியை நடத்திய இத்தாலி, நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா ஆகியவை நேரடித் தகுதி பெற்றன.
இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் ஆனது. கடந்த உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவிடம் கண்ட தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தது ஜெர்மனி. பெனால்டி ஷூட் அவுட் முறையில் அரையிறுதியில் தோல்வி கண்ட இங்கிலாந்தும், இத்தாலியும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதின. இதில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
பெரிய அளவில் கோலின்றி அமைந்த உலகக் கோப்பை போட்டிகளில் இதுவும் ஒன்று. இந்த உலகக் கோப்பையில் சராசரியாக ஒவ்வொரு ஆட்டத்திலும் (2.21) குறைவான கோல்கள் அடிக்கப்பட்டதோடு, மொத்தம் 16 ரெட் கார்டுகளும் வழங்கப்பட்டன. அதில் ஒன்று இறுதியாட்டத்தில் வழங்கப்பட்டதாகும். உலகக் கோப்பை வராற்றில் இறுதியாட்டத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது முதல்முறையாகும். எனினும் அதிக ரசிகர்களால் கண்டுகளிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது, அதிக கோலடித்தவருக்கான விருது என இரண்டையும் இத்தாலியின் சால்வடார் ஷிலாச்சி தட்டிச் சென்றார்.
1990 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 115
ஓன் கோல் - 0
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,517,348
கோலடிக்கப்படாத ஆட்டம் - 5
டிராவான ஆட்டம் - 12
டாப் ஸ்கோர்
சால்வடார் ஷிலாச்சி (இத்தாலி) - 6
டோமஸ் ஸ்குராவி (செக்.குடியரசு) - 5
மைக்கேல் (ஸ்பெயின்) - 4
ரோஜர் மில்லா (கேமரூன்) - 4
கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 4
லோதார் மட்ஹஸ் (ஜெர்மனி) - 4
ரெட் கார்டு - 16
யெல்லோ கார்டு - 169