விளையாட்டு

தோனியின் கோரிக்கை ஏற்பு: இந்திய அணிக்கு ஆலோசனை வழங்குகிறார் திராவிட்

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கோரிக்கையை ஏற்று, இங்கிலாந்து தொடருக்கான பேட்ஸ்மேன்களுக்கு முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் ஆலோசனை வழங்குகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு, ராகுல் திராவிட்டை ஆலோசகராக பிசிசிஐ நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்த பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் விளக்கம் அளிக்கும்போது, "இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக ராகுல் திராவிட் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டை விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுடன் ராகுல் திராவிட் கலந்துரையாடலில் ஈடுபட்டு, அவர்களுக்கு ஊக்கமும் ஆலோசனையும் அளிக்க வேண்டும் என்று தோனியும் பயிற்சியாளர் ஃப்ளெச்சரும் கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து திராவிட்டிடம் பேசினேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆலோசனை வழங்க சம்மதித்தார்" என்றார்.

இதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்து தொடரின் முதல் போட்டிக்கு முன்பாக, இந்திய அணியினருடன் திராவிட் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT