படம்: ஏஎன்ஐ. 
விளையாட்டு

தோனி, கோலி சாதனையுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா

ஏஎன்ஐ

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 பிரிவுகளில் 50 போட்டிகளுக்கு மேல் பங்கேற்ற மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன் தோனி, கோலி ஆகியோர் மட்டுமே இந்தப் பட்டியலில் இருந்த நிலையில் அவர்களோடு ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா இதுவரை 50 டெஸ்ட் போட்டிகள், 168 ஒருநாள் போட்டிகள், 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்தச் சாதனை குறித்து ரவீந்திர ஜடேஜா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மகேந்திர சிங் தோனியுடனும், விராட் கோலியுடனும் நான் சாதனையைப் பகிர்ந்து கொண்டது பெருமையாக இருக்கிறது. கிரிக்கெட்டின் 3 பிரிவுகளிலும் 50 ஆட்டங்களுக்கு மேல் விளையாடியுள்ளேன்.

பிசிசிஐக்கும், அணி வீரர்களுக்கும், அணியின் சக ஊழியர்களுக்கும், ஆதரவு அளித்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும், நான் மேலே வர உதவியவர்களுக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தோனி 2004-ம் ஆண்டில் அறிமுகமாகி, 90 டெஸ்ட், 350 ஒருநாள் போட்டி, 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கோலி 87 டெஸ்ட், 251 ஒருநாள், 85 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானேவுக்குத் துணையாக ஆடிய ஜடேஜா டெஸ்ட் அரங்கில் தனது 15-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். இருவரும் சேர்ந்து 6-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்ததுதான் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

SCROLL FOR NEXT