இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தால் தவறு செய்ய வைத்தார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டின் பெய்ன் பாராட்டிப் பேசியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
ஆட்டம் முடிந்த பிறகு பேசிய ஆஸி. அணியின் கேப்டன் டிம் பெய்ன், "மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. மோசமான, ஒழுங்கற்ற ஆட்டத்தை ஆடினோம். இந்தியாவுக்கான பாராட்டை கொடுத்தாக வேண்டும். எங்களை தவறு செய்ய வைத்தார்கள்.
மிக அழகாக பந்துவீசினார்கள். நாங்கள் நினைத்த அளவுக்குக் தகவமைத்துக் கொண்டு ஆடவில்லை. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. கடுமையாக உழைத்து மீண்டு வருவோம். கேமரூன் க்ரீன் நன்றாக ஆட ஆரம்பித்திருக்கிறார். தொடர்ந்து பல போட்டிகளில் ஆடும்போது அவர் சிறப்பான வீரராக விளங்குவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆட்டத்தில் பந்து வீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேர அளவைவிட அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதற்காக டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு அபராதமும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4 புள்ளிகளையும் குறைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.