இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெறும் 70 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற நிலையில் இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது.
இந்தியாவின் துவக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் சதீஷ்வர் புஜாரா இருவரும் முறையா 5 மற்றும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், கேப்டன் ரஹானே 27 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற நிலையில் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸி. அணி கூடுதலாக 67 ரன்கள் சேர்த்து, உணவு இடைவேளைக்கு முன்பு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. இன்றைய 4 விக்கெட்டுகளில், தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடும் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பந்துவீச்சுக்கு சாதகமில்லாத களத்திலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டத்தை பல கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் சதமடித்த இந்திய கேப்டன் ரஹானே ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.