விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: கபில்தேவுக்கு முட்டுக்கொடுத்த கிர்மானி

பி.எம்.சுதிர்

தோனிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி கண்ட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் சையத் கிர்மானியின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 29).

ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான சையத் கிர்மானி, சென்னையில் பிறந்து பிற்காலத்தில் பெங்களூருவில் செட்டில் ஆனவர். இந்திய அணிக்கு 1971-ம் ஆண்டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முதல் போட்டியில் இந்தியாவுக்காக ஆடும் வாய்ப்பு இவருக்கு 1976-ம் ஆண்டில்தான் கிடைத்துள்ளது. அதுவரை அப்போதைய விக்கெட் கீப்பரான பரூக் இஞ்ஜினீயருக்கு சப்ஸ்டிடியூட்டாகவே அணியில் வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் கிர்மானி கவலைப்படவில்லை. இதற்கு காரணம் தூக்கம். இந்திய அணியில் தூக்கப்பிரியராக கருதப்பட்ட கிர்மானி, அணி பரபரப்பாய் பேட்டிங் செய்யும்போதும் குறட்டை விட்டு தூங்குவாராம். தன்னுடைய புத்தகம் ஒன்றில் இதுபற்றி குறிப்பிட்டுள்ள கவாஸ்கர், “இங்கிலாந்து தொடரின்போது ஒரு நாள் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஆலன் நாட் எப்படி கீப்பிங் செய்கிறார் என்பதை கவனிக்குமாறு அணியின் மேனேஜர் ராம் பிரகாஷ் மெஹ்ரா, கிர்மானியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அந்தப் பக்கம் நகர்ந்ததும் கிர்மானி டிரெஸ்ஸிங் ரூமில் தூங்கச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மேனேஜர், கிர்மானி எங்கே என்று கேட்க, ‘சைட் ஸ்கிரீன் அருகில் நின்று அவர் ஆலன் நாட்டின் கீப்பிங்கை படித்துக்கொண்டு இருக்கிறார்’ என்று சொல்லி காப்பாற்றினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் 2,759 ரன்களையும், 49 ஒருநாள் போட்டிகளில் 373 ரன்களையும் அவர் எடுத்துள்ளார். உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே-க்கு எதிராக கபில்தேவ் 175 ரன்கள் குவித்த ஆட்டத்தில் அவருடன் 6-வது விக்கெட் ஜோடியாக 126 ரன்களுக்கு முட்டுக்கொடுத்து நின்றவர் கிர்மானி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 126 ரன்களில் கிர்மானி எடுத்த ரன்கள் 24.

SCROLL FOR NEXT