விளையாட்டு வீரர்களுக்கு இணையாக நடுவர்களாலும் ரசிகர்களைக் கவர முடியும் என்பதை நிரூபித்தவரான கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பேர்டின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 27). கிரிக்கெட் போட்டிகளின்போது பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்தால், விரல்களால் நாட்டியமாடியவாறு கைகளை அசைக்கும் ஷெப்பேர்டின் பாணியை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.
1940-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள டெவோன் எனும் ஊரில் பிறந்த டேவிட் ஷெப்பேர்ட், 1983-ம்ஆண்டுமுதல் 2003-ம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். இதில் 6 உலகக் கோப்பை தொடர்களும் அடங்கும். தனது காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான போட்டிகளில் நடுவராக இருந்துள்ள டேவிட் ஷெப்பேர்ட், தவறான முறையில் அவுட் கொடுத்ததாக எந்த வீரரும் புகார் கூறியதில்லை. அந்த அளவுக்கு துல்லியமான முடிவுகளை அவர் மைதானத்தில் எடுத்துள்ளார். பேட்டிங் செய்யும் அணிகள் 111, 222, 333, 444 என்று ஒரே எண் கொண்ட ரன்களை எடுக்கும்போதெல்லாம் ஒற்றைக்காலில் மைதானத்தில் நிற்பது இவரது மற்றொரு பாணி. இதுபற்றி கேட்டபோது அந்த எண்கள் அதிர்ஷ்டமில்லாதவை என்று கருதியதால், தான் அவ்வாறு நின்றதாக கூறியுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் ஆட வருவதற்கு முன்பு, இங்கிலாந்தில் உள்ள குளூகேஸ்டர்ஷயர் அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் டேவிட் ஷெப்பேர்ட் ஆடியுள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 10,672 ரன்களையும் குவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பேட்டிங்குக்கான பயிற்சி மையத்தை தொடங்கவே டேவிட் ஷெப்பேர்ட் முதலில் நினைத்துள்ளார். ஆனால் இந்த நேரத்தில் அவரைச் சந்தித்த நண்பர் ஒருவர், “கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தை ரசிக்க ஏற்ற இடம், நடுவர்கள் நிற்கும் இடம்தான். அங்கிருந்துதான் வீரர்களின் ஒவ்வொரு ஷாட்டையும் அருகில் இருந்து ரசிக்க முடியும்” என்று கூறியுள்ளார். இதனாலேயே கிரிக்கெட் ரசிகரான டேவிட் ஷெப்பேர்ட், நடுவராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.