மும்பையில் நடைபெறும் குரூப் பி ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 167 ரன்கள் எடுத்து தமிழ்நாடு அணியை மீட்டார் தினேஷ் கார்த்திக். இதனால் 2-ம் நாளான இன்று தமிழ்நாடு அணி தன் முதல் இன்னிங்சில் 434 ரன்கள் எடுத்துள்ளது.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி ஆட்ட முடிவில் ஹெர்வாட்கர், ஸ்ரேயஸ் ஐயர் விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் நாளான நேற்று 249/6 என்று இருந்த தமிழ்நாடு அணியில் தினேஷ் கார்த்திக் 76 ரன்களுடனும், ரங்கராஜன் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று தொடங்கிய தினேஷ் கார்த்திக், ரங்கராஜனுடன் இணைந்து ஸ்கோரை 385 ரன்களுக்கு உயர்த்தினர், இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 182 ரன்களை சுமார் 50 ஓவர்களில் எடுத்தனர். 61 ரன்களில் ரங்கராஜன் அவுட் ஆகி வெளியேறினார்.
சதம் எடுத்து மேலும் ரன்களை குவித்த தினேஷ் கார்த்திக் 262 பந்துகளில் 19 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 167 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் தபோல்கரிடம் எல்.பி. ஆனார். கார்த்திக் அவுட் ஆன பிறகு 434 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தமிழ்நாடு அணி.
அபிநவ் முகுந்த் இல்லாத காரணத்தினால் அபராஜித் சகோதரர் பாபா இந்திரஜித் கேப்டன் பொறுப்பை வகித்தார். ஆனால் இவர் ரன் எடுக்காமல் பாபா அபராஜித் அவுட் ஆன அடுத்த பந்தில் தபோல்கரிடம் அவுட் ஆனார். முன்னதாக முரளி விஜய் 8 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார்.
தொடக்கத்தில் களமிறங்கிய பாபா அபராஜித் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்தார்.
மும்பை தரப்பில் தபோல்கர் 41 ஓவர்கள் வீசி 8 மெய்டன்களுடன் 122 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.