விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: லார்ட்ஸ் மைதானத்தில் பழிவாங்கிய கங்குலி

பி.எம்.சுதிர்

கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக யாராவது செயல்பட்டால், அப்படிச் செய்தவர்களுக்கு அவர்களின் வழியிலேயே பதில் சொல்வது முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பாணி. அதனாலேயே அவர் தாதா என்று செல்லமாக அழைக்கப்பட்டார். கங்குலியின் அதிரடிக்கு உதாரணமாக லார்ட்ஸ் மைதானத்தில், அவர் தன் சட்டையைக் கழற்றி சுற்றியதைச் சொல்லலாம்.

2002-ம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மும்பையின் வாங்கடே மைதானத்தில் இந்த தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்திய அணி ஒரு ஓவரில் 11 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழலில் கடைசி ஓவரை வீசிய இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப், வெற்றிக்குத் தேவையான ரன்களைக் கொடுக்காமல் இந்தியாவைத் தோற்கடித்தார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் வாங்கடே மைதானத்தில் தன் சட்டையை கழற்றி சுழற்றினார். பிளிண்டாஃபின் இந்தச் செயல் இந்தியாவுக்கு அவமானம் என்று கருதிய கங்குலி, அதற்கு பழிவாங்கக் காத்திருந்தார். அதே ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை இந்தியா வெற்றிகொள்ள அதே ஆவேசத்துடன் தன் சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி. இங்கிலாந்துக்காரர்களால் இதை ஜீரணிக்கை முடியவில்லை.

“கிரிக்கெட்டின் மெக்காவாக நாங்கள் கருதும், லார்ட்ஸ் மைதானத்தில், மரியாதை இல்லாமல் எப்படி சட்டையைக் கழற்றலாம்?” என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜெப்ரி பாய்காட் கங்குலியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கங்குலி, “உங்களுக்கு வேண்டுமானால் லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்காவாக இருக்கலாம். ஆனால் மும்பை மைதானம்தான் எங்களின் கிரிக்கெட் மெக்கா” என்றார்.

SCROLL FOR NEXT