ஐபிஎல் டி20 தொடரில் கூடுதலாக 2 அணிகளைச் சேர்த்து, 2022-ம் ஆண்டிலிருந்து 10 அணிகள் கொண்ட போட்டித் தொடராக நடத்த பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுவில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. ஐபிஎல் டி20 தொடரில் தற்போது 8 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றன. இந்தத் தொடரில் கூடுதலாக 2 அணிகளைச் சேர்க்க ஆலோசிக்கப்பட்டது. அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயிட்ன்ஸ்) குழுமத்தினர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று நடந்த பிசிசிஐ பொதுக்குழுவில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 புதிய அணிகளைச் சேர்க்க பிசிசிஐ பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
வரும் 2022-ம் ஆண்டில் நடக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து 10 அணிகள் போட்டியில் பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருப்பதால், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்யும் விருப்பத்தை ஐசிசியிடம் கூறி திரும்பப் பெறக் கோரி முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக எந்த உள்நாட்டுப் போட்டியும் நடக்கவில்லை. ஆதலால், ஆடவர் மற்றும் மகளிர் முதல்தர வீரர்களுக்குத் தகுதியான, உரிய இழப்பீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லாவை பிசிசிஐ அமைப்பின் துணைத் தலைவராக மீண்டும் நியமித்து பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. ஐசிசி வாரியத்தின் இயக்குநராக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, கங்குலி இல்லாத நேரத்தில் மாற்று இயக்குநராகவும், ஐசிசி நிர்வாகக் குழுவில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.