தினேஷ் கார்த்திக் : கோப்புப்படம் 
விளையாட்டு

சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை: தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி

ஏஎன்ஐ


சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணைக் கேப்டனாக விஜய் சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் பல்வேறு மாநில அணிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

கரோனா வைரஸ் லாக்டவுனுக்குப்பின் எந்தவிதமான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை, ஏறக்குறைய 9 மாதங்களுக்குப்பின், அடுத்த ஆண்டு ஜனவரி 2-வது வாரத்தில் உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன.தமிழக அணி பங்கேற்கும் போட்டி அனைத்தும் கொல்கத்தாவில் ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது.

தமிழக வீரர் முரளி விஜய் காயம் காரணமாக அணியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திர அஸ்வின், டி. நடராஜன் இருவரும் விளையாடி வருவதால் அவர்கள் தமிழக அணியில் விளையாட முடியாது.

சயத் முஷ்டாக் அலி போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள மொடேரா அரங்கில் நடக்கிறது. இதன்படி ஜனவரி 26, 27 காலிறுதிப் போட்டிகளும், ஜனவரி 29-ம் தேதி அரையிறுதி ஆட்டமும், 31-ம் தேதி இறுதி ஆட்டமும் நடக்கிறது.

தமிழக அணி விவரம்:
தினேஷ் கார்த்திக்(கேப்டன்), விஜய் சங்கர்(துணைக் கேப்டன்), பி. அபராஜி்த், பி.இந்திரஜித், அஸ்வின் கிறிஸ்ட், எம். முகமது, ஜி.பெரியசாமி, சந்தீப் வாரியர், ஜே.கவுசிக், ஆர்.சோனு யாதவ், எம்.அஸ்வின், எம்.ஷாருக்கான், சி ஹரி நிசாந்த், கே.பி. அருண் கார்த்திக், பிரதோஷ் ராஜன் பால், என். ஜெகதீசன், ஆர். சாய் கிஷோர், எம்.சித்தார்த், எல்.சூர்யபிரகாஷ், ஆர்எஸ் ஜெகநாத் ஸ்ரீனிவாஸ்.

SCROLL FOR NEXT