மெல்போர்னில் வரும் 26-ம் தேதி இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நாயகன் டேவிட் வார்னர், வேகப்பந்துவீச்சாளர் ஷான் அபாட் இருவரும் காயம் காரணமாகவும், கரோனா விதிகள் காரணமாகவும் நீக்கப்பட்டுள்ளனர்.
டேவிட் வார்னர், அபாட் இருவரும் பயோ-பபுள் சூழலைக் கடந்து வெளியே சென்று இருவரும் காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். மீண்டும் அணிக்குள் வரவேண்டும் என்றால் தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தபின்புதான் அணிக்குள் வர முடியும். அதற்கு சாத்தியமில்லை என்பதால், 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ டேவிட் வார்னர் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஷான் அபாட் காயத்திலிருந்து குணமடைந்தாலும் பயோபபுள் சூழலைவிட்டு வெளியே சென்று சிகிச்சை எடுத்ததால், அவரும் தற்போது அணிக்குள் வர இயலாது.
ஆதலால், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இருவருக்குப் பதிலாக புதிதாக யாரும் சேர்க்கப்படவில்லை. ஜனவரி 7-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் தொடைப்பகுதியில் வார்னருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, டி20 தொடரிலிலிருந்து வார்னர் நீக்கப்பட்டார், அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் வார்னர் விளையாடவில்லை. முழுமையாக காயத்திலிருந்து மீளாததால் 2வது டெஸ்ட் போட்டியிலும் வார்னர் விளையாடாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும்.