மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 89 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மத்தியப் பிரதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த தமிழக அணியில் பரத் சங்கர் 1 ரன்னில் வெளியேற, கேப்டன் அபினவ் முகுந்துடன் இணைந்தார் அபராஜித். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது. முகுந்த் 72 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேற, தினேஷ் கார்த்திக் களம்புகுந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய அபராஜித், தமிழகம் 100 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். அவர் 133 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்திரஜித் களமிறங்க, தினேஷ் கார்த்திக் 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது 48.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தமிழகம்.
இதன்பிறகு இந்திரஜித்துடன் இணைந்தார் பிரசன்னா. இந்த ஜோடி சிறப்பாக ஆட, தமிழகம் சரிவிலிருந்து மீண்டது. தமிழக அணி 201 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் பிர்லா. 103 பந்துகளை சந்தித்த இந்திரஜித் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு கவுஷிக் களமிறங்க, பிரசன்னா அரைசதம் கண்டார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி 89 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. பிரசன்னா 51, கவுஷிக் 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மத்தியப் பிரதேசம் தரப்பில் ஈஸ்வர் பாண்டே, பிர்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.