விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: நண்பன் செய்த தியாகம்

பி.எம்.சுதிர்

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இன்று அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு இணையாக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து போட்டிகளில் 700-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள ரொனால்டோவின் ஆண்டு வருமானம் ரூ.772 கோடி. உலக வரைபடத்தில் சிறு புள்ளியாகத் தெரியும் போர்ச்சுக்கல் நாட்டை கால்பந்து விளையாட்டில் வல்லரசாக மாற்றிய பெருமையும் ரொனால்டோவுக்கு உண்டு.

ரொனால்டோவின் அப்பாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனை ஒரு நடிகராக மிகவும் பிடிக்கும். அதனால் 1985-ம் ஆண்டில் தனக்கு மகன் பிறந்தபோது ரீகனின் பெயரை அடிப்படையாக வைத்து மகனுக்கு ரொனால்டோ என்று பெயரிட்டார். சிறு வயதில் பள்ளிக்கு செல்வதென்றால் ரொனால்டோவுக்கு கொஞ்சமும் பிடிக்காது. முன்கோபமும் அதிகம். ஒருமுறை ஆசிரியர் தன்னை அவமரியாதையாக நடத்தியதால், அவர் மீது நாற்காலியை வீசியுள்ளார். அதனால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரொனால்டோ, கால்பந்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

சிறுவயதில், லிஸ்பனில் உள்ள கால்பந்து அகாடமி ஒன்றில் சேர ரொனால்டோவும், அவரது நண்பர் ஆல்பர்ட் ஃபாண்டிரோவும் விண்ணப்பித்துள்ளனர். இதில் ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், ஆல்பர்டுக்கு இடம் கிடைத்துள்ளது. தன்னைவிட ரொனால்டோதான் சிறந்த வீரர் என்பதில் உறுதியாக இருந்த ஆல்பர்ட், அகாடமியைச் சேர்ந்தவர்களிடம் சென்று, தனக்கு பதிலாக ரொனால்டோவை அகாடமியில் சேர்க்குமாறு கூறியுள்ளார். அன்றைய தினம் ஆல்பர்ட் தனக்காக தியாகம் செய்யாவிட்டால், தன்னால் இத்தனை பெரிய கால்பந்து வீரனாக வந்திருக்க முடியாது என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார் ரொனால்டோ. இதற்கு பிரதி உபகாரமாக ஆல்பர்ட்டுக்கு வீடு, கார் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்த ரொனால்டோ, நிறைய பணத்தையும் கொடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT