மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 152.3 ஓவர்களில் 484 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி யின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 135, தினேஷ் சன்டிமல் 72 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் கருணாரத்னே 304 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இதனால் 103-வது ஓவரில் 300 ரன்களை எட்டியது இலங்கை. மறுமுனையில் சிறப்பாக ஆடிய தினேஷ் சன்டிமல் 196 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 5-வது சதமாகும்.
கருணாரத்னே, மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக 186 ரன்களில் (354 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன்) ஆட்டமிழந்தார். இதன்பிறகு சன்டிமல் 298 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்தவர்களில் கேப்டன் மேத்யூஸ் மட்டுமே 48 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் விரைவாக வெளியேற, 152.3 ஓவர்களில் 484 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் தேவந்திர பிஷூ 4 விக்கெட்டு களையும், ஜெரோம் டெய்லர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 21 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. டேரன் பிராவோ 15, சாமுவேல்ஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.