டென்னிஸ் போட்டி என்றாலே அது அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்குமானது. இந்தியர்களால் அதில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இந்த மாயையை உடைத்து எறிந்தவர்கள் லியாண்டர் பயஸ் – மகேஷ் பூபதி இரட்டையர்கள்.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இந்த இரட்டையர் ஜோடி, தங்கள் வெற்றிப் பயணத்தை 1997-ம் ஆண்டு சென்னையில் தொடங்கியது. அந்த ஆண்டில் முதல் முறையாக சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற பயஸ் - பூபதி ஜோடி, அதே ஆண்டில் 6 ஏடிபிடென்னிஸ் தொடர்களில் வெற்றியை ருசித்தது. அடுத்ததாக 1998-ல் 3 முறை கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் அரை இறுதியை எட்டியது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய இந்த ஜோடி 1999-ம் ஆண்டில் டென்னிஸ் உலகில் உச்சம் தொட்டது. அந்த ஆண்டில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், பட்டம் வென்று, இந்தியர்களாலும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வெல்ல முடியும் என்று நிரூபித்தது. அதன்பிறகு சில ஆண்டுகளுக்கு டென்னிஸ் உலகில் இவர்களின் ராஜ்ஜியம் தான்.
டென்னிஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த இந்த ஜோடி அடுத்தடுத்து 16 போட்டிகளில் பட்டம் வென்று வெற்றிக்கொடியை பறக்கவிட்டது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் மற்றும் ஏடிபி போட்டிகள் மட்டுமின்றி, இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் வெற்றி பெற்று, உலகின் நம்பர் ஒன் ஜோடியாக உருவெடுத்தது.
இந்த நேரத்தில், யாருடைய கண் பட்டதோ, இந்த வெற்றிக் கூட்டணி பிரிந்தது. இனி சேர்ந்து விளையாடுவதில்லை என்று இருவரும் முடிவெடுத்தனர். இந்த ஜோடி பிரிந்தாலும் இவர்கள் தந்த வெற்றிகள் என்றும் நம் நினைவில் இருக்கும்.