கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரரும், இந்திய அணியில் இடம் பெற்றவருமான தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தனது நீண்டகாலத் தோழியை இன்று திருமணம் செய்தார். மிகவும் எளிய முறையில் நடந்த இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.
29 வயதாகும் வருண் சக்ரவர்த்தி கிரிக்கெட் விரும்பியாக இருந்தாலும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாகவே கிரிக்கெட் பழகியவர். ஆனால், விக்கெட் கீப்பர் பணிக்குப் பல போட்டிகள் இருந்ததால், கடந்த 2018-ம் ஆண்டில்தான் சுழற்பந்துவீச்சுக்கு மாறிப் பயிற்சி எடுத்தார். முதல்தரப் போட்டிகளில் 12 டி20 போட்டிகளில் மட்டுமே வருண் சக்ரவர்த்தி விளையாடியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற வருண் சக்ரவர்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதையடுத்து, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தொடர்ந்து தோனியின் விக்கெட்டை விக்கெட்டை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்திய அணியில் இடம் பெற்றும், காயம் காரணமாக ஆஸி.தொடருக்கு அவரால் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் வாழ்க்கையில் அடுத்த இன்னிங்ஸில் காலடி வைத்துள்ள வருண் சக்ரவர்த்தி, தனது நீண்டகாலத் தோழி நேகாவை இன்று எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் மட்டுமே பங்கேற்றதாகக் கூறப்படும் இத்திருமணம் மிகவும் எளிய முறையில் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
சென்னையில் செயின்ட் பாட்ரிக் பள்ளியில் படித்த வருண் சக்ரவர்த்தி, சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது தீவிர ஆர்வத்துடன் இருந்தவர்.
ஆனால், தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியில் இவருக்குப் பல காரணங்களால் இடம் கிடைக்கவில்லை. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் வருண் என்பதால், படிப்புதான் பிரதானம் என்பதால், தொடர்ந்து படிக்கத் தொடங்கினார்.
வருண் நன்றாக ஓவியம் வரைவார் என்பதால், கட்டிடக்கலை வல்லுநர் படிப்பில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து முடித்தார். படித்து முடித்தபின் சரியான வேலை கிடைக்காமல் கிடைக்கும் வேலை செய்துவந்த நிலையில்தான் கிரிக்கெட் விளையாட்டுக்கு முழுமையாகத் திரும்பினார்.
அதன்பின் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் வருண் சக்ரவர்த்தி மதுரை பேந்தர்ஸ் அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டபோதுதான் அவரின் திறமை அனைவராலும் அறியப்பட்டது. குறிப்பாக வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்துவீச்சைப் பார்த்து தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் வியந்தார்கள். அதன்பின் வருண் சக்ரவர்த்தி கிரிக்கெட்டின் படிகளில் உயரே செல்வதற்கு அடுத்தடுத்து பலர் உதவினார்கள். ஐபிஎல் அணியில் இடம் பெற்று, தற்போது இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.