இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் இதே போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில், வலைப் பயிற்சியில் பந்து வீசுவதற்காக நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி20 அணியில் வருண் சக்ரவர்த்தி அறிமுகமாகவிருந்தார். ஆனால், அவர் காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியவில்லை. அவருக்குப் பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டார்.
மேலும் ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜன் விளையாடினார். இதன் மூலம் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி, டி20 போட்டி என அடுத்தடுத்து நடராஜனுக்கு ஆஸ்திரேலியத் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நடராஜன் அணியில் அனைவரது அபிமானத்தையும் வென்றிருக்கிறார். அதிக ரன்கள் குவிக்கப்பட்ட இந்த டி20 தொடரில் நடராஜன் மிகக் குறைவான ரன்களையே கொடுத்து முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். தொடர் நாயகனான ஹர்திக் பாண்டியா, தனது தொடர் நாயகன் தேர்வு நடராஜன்தான் என்று வாழ்த்தியுள்ளார்.
அணியின் தலைவர் விராட் கோலி நடராஜன் பற்றிப் பேசுகையில், "அவரைப் பற்றி விசேஷமாகக் குறிப்பிட வேண்டும். ஏனென்றால் ஷமி, பும்ரா இல்லாத நிலையில் அவர் தான் அழுத்தத்தில் தேவைக்கேற்ப சிறப்பாகப் பந்துவீசியது. சர்வதேச அளவில் அவர் முதல் தொடரில் விளையாடுகிறார் எனும்போது இது மிகச் சிறப்பான விஷயம்.
அவர் மிகவும் அமைதியான நபர். என்ன செய்ய வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் இருப்பவர். மிகவும் கடினமான உழைப்பாளி. அடக்கமானவர். அணியில் அர்ப்பணிப்புடன், கடினமாக உழைக்கும் வீரர்கள் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்யும்போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
அவருக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து அவர் இதே அர்ப்பணிப்போடு ஆடுவார், மேம்படுவார் என நம்புகிறேன். ஏனென்றால் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது எந்த அணிக்குமே சாதகம் தான். தொடர்ந்து அவர் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பையில் எங்களுக்குப் பெரிய சாதகமாக இருக்கும்" என்று கோலி கூறியுள்ளார்.