விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பொதுவாக அனைத்து வீரர்களும் ஆடுவார்கள். அதேநேரத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று பயிற்சியைத் தொடர்வார்கள்.
ஆனால் இதெல்லாம் மற்ற நாட்டு வீரர்களுக்குத்தான். வடகொரிய வீரர்களைப் பொறுத்தவரை தாங்கள் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நிர்பந்தமான மனநிலையுடன்தான் போட்டிகளில் பங்கேற்பார்கள். வெற்றி பெறாமல் நாட்டுக்குத் திரும்பினால் கடுமையான தண்டனை கிடைக்குமே என்ற அச்சமே இதற்கு காரணம். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி போன்றவற்றில் ஆடும் வீரர்களுக்கு மற்ற நாடுகளில் உள்ளதைப் போலவே பல்வேறு வசதிகளை வட கொரிய அரசும் செய்து கொடுக்கும். ஆனால் அவர்கள் பதக்கம் வெல்லாமல் நாடு திரும்பினால் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது அந்நாட்டு அரசின் குணம்.
உதாரணமாக கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா சார்பாக 31 வீரர்கள் கலந்துகொண்டனர். குறைந்தது 12 பதக்கங்களையாவது வெல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் அந்நாட்டின் அதிபரான கிம் ஜங்-உங். ஆனால் 7 வீரர்கள்தான் பதக்கங்களை வென்றனர். இதனால் கடுப்பான கிம், அவர்களுக்கு வழங்கப்பட்ட வசதியான வீடுகளில் இருந்து காலி செய்யச் சொல்லி, வசதி குறைந்த வீடுகளுக்கு மாற்றியுள்ளார். அத்துடன் நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட கடுமையான இடங்களில் 2 ஆண்டுகள் வேலை பார்க்குமாறு பணித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு ஆடம்பர வீடுகள், கூடுதல் ரேஷன், கார்கள் உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கியுள்ளார் கிம்.
என்னதான் பரிசுகளை வாரி வழங்கினாலும், அடுத்த முறை தோற்றால், தங்களுக்கும் தண்டனை கிடைக்குமோ என்ற அச்சத்தில்தான் எப்போதும் அந்நாட்டு வீரர்கள் உள்ளனர்.