டிஆர்எஸ் வாய்ப்புக்கான நேரம் முடிந்துவிட்டதை கோலியிடம் தெரிவித்த நடுவர்கள். 
விளையாட்டு

கோலியின் தாமதத்தால் தப்பித்த மேத்யூ வேட்

ஏஎன்ஐ

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி, தாமதமாக டிஆர்எஸ் வாய்ப்பைப் பயன்படுத்தியதால், ஆஸி. பேட்ஸ்மேன் மேத்யூவேடை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டார்.

சிட்னியில் 3-வது டி20 ஆட்டம் நடந்து வருகிறது. டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஆஸி. அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தப் போட்டியில் 11-வது ஓவரை நடராஜன் வீசினார். அப்போது 3-வது பந்தில் 2 ரன்கள் அடித்த மேத்யூ வேட், தொடர்ந்து 2-வது அரை சதத்தை நிறைவு செய்தார். நடராஜன் வீசிய பந்தை மேத்யூ வேட் கால்காப்பில் வாங்கினார். முன்னங்கால் பேடில் பந்தை மேத்யூ வேட் தடுத்ததால் அது எல்பிடபிள்யு என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஆனால், களத்தில் இருந்த நடுவர் அவுட் ஏதும் வழங்கவில்லை. குறிப்பாகப் பந்துவீச்சாளர் நடராஜனோ, விக்கெட் கீப்பர் ராகுலோ கேப்டன் கோலியிடம் மூன்றாவது நடுவரிடம் டிஆர்எஸ் முறைக்கு செல்லக் கோரி ஏதும் சைகை செய்யவில்லை. இதனால், பவுண்டரி பகுதியில் நின்றிருந்த கோலி அமைதியாக இருந்தார்.

மைதானத்தில் இருந்த திரையில் காட்சியைப் பார்த்த கோலி, வேகமாக ஓடிவந்து மேத்யூ வேட் கால்காப்பில் வாங்கியதற்கு டிஆர்எஸ் முறைக்கு அப்பீல் செய்தார். ஆனால், அதற்கு நடுவர் மணியைக் கணக்கிட்டு, டிஆர்எஸ் முறைக்கு அப்பீல் செய்யக் கால அவகாசம் முடிந்துவிட்டது எனக் கூறிவிட்டார்.

இதனால் மேத்யூ வேட் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்திருந்தும் அவரை ஆட்டமிழக்கச் செய்யமுடியாமல் போனது.

பொதுவாக டிஆர்எஸ் முறைக்கு அப்பீல் செய்வதற்கு கேப்டன்களுக்கு 15 வினாடிகள்தான் நேரம் ஒதுக்கப்படும். அதற்குள் டிஆர்எஸ் முறைக்கு அப்பீல் செய்யாவிட்டால், அது வீணாகிவிடும். ஒருவேளை 15 வினாடிகளுக்குப் பின் டிஆர்எஸ் அப்பீல் கோரினாலும் அது எடுத்துக் கொள்ளப்படாது.

SCROLL FOR NEXT