விளையாட்டு

கடைசி டி 20 போட்டியில் இன்று மோதல்- ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி

செய்திப்பிரிவு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் கான்பெராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியது. கடைசி மற்றும் 3-வது ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

குறுகிய வடிவிலான தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றுவதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முனைப்பு காட்டக் கூடும். முதல் ஆட்டத்தில் 161 ரன்களே சேர்த்த போதிலும் பந்து வீச்சில் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு இந்திய அணி வெற்றியை வசப்படுத்தியது. அதேவேளையில் 2-வது ஆட்டத்தில் 195 ரன்கள் இலக்கை துரத்திய போது ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் 2 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.

ஆஸ்திரேலிய அணியானது முன்னணி வீரர்களின் காயத்தால் கவலை அடைந்துள்ளது. ஏற்கெனவே டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ் ஆகியோர் டி20 தொடரில் விளையாடாத நிலையில் தற்போது கேப்டன் ஆரோன் பின்ச், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் இன்றைய ஆட்டத்திலும் களமிறங்குவது சந்தேகம்தான்.

கடந்த ஆட்டத்தில் 194 ரன்கள் குவித்த போதிலும், பந்து வீச்சில் சரியான திட்டமிடுதல் இல்லாததால் தோல்வி அடைந்ததுடன், தொடரையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி. ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ் காயத்தில் இருந்து மீண்டு கடந்த ஆட்டத்தில் பங்கேற்ற போதிலும் அவர் பந்து வீசவில்லை. இது அந்த அணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆண்ட்ரூ டை, டேனியல் சேம்ஸ், சீன் அபோட் ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது கடும் பின்னடைவை கொடுத்தது.

சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பா, ஸ்வெப்சன் ஆகியோர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனினும், அது வெற்றிக்கு வழிவகுப்பதாக இல்லை. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே ஆறுதல் வெற்றியையாவது பெற முடியும்.

இன்றைய ஆட்டம்

நேரம்: பிற்பகல் 1.40

நேரலை: சோனி சிக்ஸ்

SCROLL FOR NEXT