மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நியூஸிலாந்து அணி : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

நியூஸி இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: பேட்டிங்கில் வில்லியம்ஸன், பந்துவீச்சில் சவுதி, வாக்னர் அற்புதம் ; மே.இ.தீவுகள் தோல்வி

க.போத்திராஜ்


ஹேமில்டனில் நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.

கரோனா வைரஸ் பரவலுக்குப்பின் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி பெறும் முதலாவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் இந்த சீசனில் நியூஸிலாந்தில் நடந்த மே.இ.தீவுகள், பாகிஸ்தானுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது நியூஸிலாந்து 1-0 என்று முன்னிலையில் உள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டியையும் வென்றால், 2-0 என்று தொடரை வென்று, டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கும்.

நியூஸிலாந்து அணி பெற்ற டெஸ்ட் வெற்றிகளிலேயே இது மிகப்பெரியதும், மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் வெற்றிகளில் இது மிகவும் பெரியதாகும். அது மட்டுமல்லாமல் இதுவரை நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற போட்டிகளில் 5-வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இதற்கு முன் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக 2 முறை இன்னிங்ஸ் வெற்றிகளும், பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராக மிகப்பெரிய இன்னி்ஸ் வெற்றியும் பெற்ற நிலையில் இது 5-வது மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாக நியூஸிக்கு அமைந்தது.

முதல் இன்னிங்ஸில் மராத்தான் பேட்டிங் செய்து, இரட்டை சதம்அடித்து 251 ரன்கள் குவித்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆட்டநாயகன் விருது வென்றார்.

கேன் வில்லியம்ஸனின் மாரத்தான் இரட்டை சதத்தால் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 3-ம் நாளான நேற்றையஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 64 ஓவர்களில் 138 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

விக்கெட் கீப்பர் டோவ்ரிச்சுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் 138 ரன்களுக்கு மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ் முடிந்தது.

நியூஸிலாந்து தரப்பில் சவுதி 4 விக்கெட்டுகளையும், ஜேமிஸன், வாக்னர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

381 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை மே.இ.தீவுகள் தொடங்கியது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய மே.இ.தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்திருந்தது.

பிளாக்வுட் 80 ரன்னிலும், ஜோஸப் 59 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணியைவிட 185 ரன்கள் பின்தங்கிய நிலையில் மே.இ.தீவுகள் அணி இருந்தது.

4-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடந்தது. சிறப்பாக ஆடிய பிளாக்வுட் 135 பந்துகளில் 2-வது டெஸ்ட் சதம் அடித்தார். நிதானமாக ஆடி சதத்தை நோக்கி நகர்ந்த ஜோஸப் 86 ரன்னில் ஜேமிஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்துப் பிரி்ந்தனர்.

அடுத்த சிறிது ேநரத்தில் பிளாக்வுட் 104 ரன்னில்(2சிக்ஸர்,11பவுண்டரி) வாக்னர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த கேப்ரியல் டக்அவுட்டில் வாக்னர் பந்துவீச்சில் வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் டோவ்ரிச் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதால், 58.5 ஓவர்களில் 247 ரன்களுக்கு மே.இ.தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

நியூஸிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட்டுகளையும், ஜேமிஸன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT