விளையாட்டு

பாண்டியா - ஜடேஜா அதிரடி ஆட்டம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 302 ரன்கள் சேர்ப்பு

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 302 ரன்களைச் சேர்த்துள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணிக்கு ஷிகர் தவான், ஷுப்மன் கில் இருவரும் நிதானமான துவக்கத்தையே தந்தனர். 6-வது ஓவரிலேயே ஷிகர் தவான் அபாட் பந்து வீச்சில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு களமிறங்கிய கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து ஷுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். 16-வது ஓவரில் ஷுப்மன் கில்லின் அதிரடிக்கு முடிவு வந்தது. 33 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் ஐயர் (19 ரன்கள்), கேஎல் ராகுல் (5) எனத் தொடர்ந்து ஆட வந்தவர்கள் சொற்ப ரன்களுக்குப் பெவிலியன் திரும்பினர்.

நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 64 பந்துகளில் அரை சதம் எட்டினார். 30 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி 144 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இதன் பிறகு கோலியும் பாண்டியாவும் வேகமாக ரன் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 32வது ஓவரில் விராட் கோலி 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்டியாவும் பார்ட்னர்ஷிப்பில் நிலைத்து ஆடினாலும் எதிர்பார்த்த வேகத்தில் ரன்கள் சேரவில்லை. 40 ஓவர்கள் முடிவில் 192 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தது.

களம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் ரன் சேர்ப்பில் வேகம் கூட்ட முடியாமல் இந்திய பேட்ஸ்மென்கள் தத்தளித்தனர். வரிசையிலும் பேட்டிங் ஆட வீரர்கள் இல்லை என்பதால் களத்தில் இருந்த பேட்ஸ்மென்களால் அதிரடி ஆட்டத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியவில்லை.

ஆனால் 40 ஓவர்களுக்குப் பின் நீண்ட நேரமாக ரசிகர்கள் காத்திருந்த விளாசல் ஆட்டத்தை பாண்டியாவும் ஜடேஜாவும் ஆரம்பித்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை இருவரும் சிதறடித்தனர். ரவீந்திர ஜடேஜா 43 பந்துகளில் அரை சதம் எட்டினார். கடைசி பத்து ஓவர்களில் இந்திய அணி 110 ரன்களைச் சேர்த்தது. பார்ட்னர்ஷிப்பில் இருவரும் 150 ரன்களை சேர்த்தனர்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 302 ரன்களை சேர்த்தது. ரவீந்திர ஜடேஜா 66 ரன்களுடன் (50 பந்துகள், 5 பவுண்டரி, 3 சிக்ஸர்) , ஹர்திக் பாண்டியா 92 ரன்களுடன் (76 பந்துகள், 7 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த களத்தில் இந்த ஸ்கோர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்றே வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்திருந்த இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும், சைனிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரும், ஷமிக்கு பதிலாக டி நடராஜனும், சஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவும் இடம்பெற்றனர். நடராஜனுக்கு இது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT