விளையாட்டு

சச்சினின் சாதனையைத் தகர்த்த கோலி: ஒருநாள் போட்டிகளில் வேகமாக 12 ஆயிரம் ரன்கள் சேர்ப்பு

ஐஏஎன்எஸ்

ஒருநாள் போட்டிகளில் வேகமாக 12 ஆயிரம் ரன்களைச் சேர்த்த பேட்ஸ்மேன் என்கிற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரைவிடக் குறைவான ஆட்டங்களில் இந்தச் சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டு தொடரை இழந்துவிட்ட நிலையில், புதன்கிழமை அன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில்தான் விராட் கோலி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

மொத்தம் 242 இன்னிங்ஸில் (251 ஆட்டங்கள்) இந்தச் சாதனையை கோலி எட்டியுள்ளார். இது சச்சின் எடுத்துக்கொண்ட 300 இன்னிங்ஸ் என்கிற எண்ணிக்கையை விட 58 இன்னிங்ஸ் குறைவாகும். ஒருநாள் போட்டிகளில் கோலியின் சராசரி 60.

இந்தப் பட்டியலில் 3, 4, 5, 6 ஆகிய இடங்களில் முறையே ரிக்கி பாண்டிங் (314 இன்னிங்ஸ்), சங்கக்காரா (336 இன்னிங்ஸ்), ஜெயசூர்யா (379 இன்னிங்ஸ்), ஜெயவர்த்தனே (399 இன்னிங்ஸ்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், கோலியின் சாதனையை முறியடிக்க இன்னும் சில காலம் பிடிக்கும் என்றே தெரிகிறது.

மேலும், இந்தச் சாதனை கோலிக்குப் புதிதல்ல. ஏற்கெனவே வேகமாக 8,000 ரன்களை எட்டியவர் என்கிற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். தொடர்ந்து 9,000, 10,000, 11,000 என்று அடுத்தடுத்த மைல்கல்களைச் சாதனையுடன் எட்டியவர் கோலி.

இதுவரை 86 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 82 டி20 போட்டிகளில் கோலி விளையாடியுள்ளார். சமீபத்தில் 250-வது ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 9-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் கோலி பெற்றார்.

இதுவரை அதிகபட்சமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்கிற சாதனை சச்சின் டெண்டுல்கர் வசமே உள்ளது. மொத்தம் 464 ஒருநாள் போட்டிகளில் ஆடிய சச்சின் 18,426 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 49 சதங்களும் அடங்கும். மேலும் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களையும் சேர்த்துள்ளார்.

SCROLL FOR NEXT