இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெரா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த இந்திய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்தது. கடைசி ஒரு நாள் போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடர்ச்சியாக 2-வது முறையாக தொடரை முழுமையாக 3-0 என பறிகொடுக்கும். கடைசியாக இந்திய அணி கடந்த பிப்ரவரி மாதம் நியூஸிலாந்திடம் 3-0 என தோல்வி கண்டிருந்தது.
கடந்த இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் வேட்டை நிகழ்த்தினர். இன்றைய ஆட்டத்திலும் அதே செயல் திறனை வெளிப்படுத்துவதில் அந்த அணி முனைப்பு காட்டக் கூடும்.
இந்திய அணியை பொறுத்த வரையில் பந்து வீச்சை பலப்படுத்தினால் மட்டுமே ஆறுதல் வெற்றியை பெற முடியும். இன்றைய ஆட்டத்தில் நவ்தீப் சைனி, யுவேந்திர சாஹல் நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதேவேளையில் பும்ரா அல்லது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட கூடும். இது நிகழ்ந்தால் ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், நடராஜன் ஆகியோர் களமிறங்குவார்கள்.