முகமது ஷமி : படம் உதவி | ட்விட்டர். 
விளையாட்டு

அகர்கரின் 18 ஆண்டு சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி? ஆஸி.யுடன் நாளை 3-வது ஒருநாள் போட்டி

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 18 ஆண்டுகாலம் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் வைத்திருக்கும் சாதனையை, ஆஸிக்கு எதிராக நாளை நடக்கும் 3-வது ஒருநாள் போட்டியில் முகமது ஷமி உடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே முதல் இரு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துவிட்டது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் கான்பெரேராவில் நாளை நடக்கிறது. கடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி இருவரின் பந்துவீச்சும் எடுபடவில்லை.

இருவரின் பந்துவீச்சையும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர். கட்டுக்கோப்பாகவும், துல்லியமாகவும் பந்துவீசக்கூடிய இருவரின் ஓவருக்குச் சராசரியாக 6 ரன் ரேட் வீதத்தில் வழங்கினர். இதனால் இருவரும் நாளைய போட்டியில் எவ்வாறு பந்துவீசப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதுதவிர கடந்த இரு போட்டிகளிலும் 17 ஓவர்கள் வீசிய நவ்தீப் ஷைனி 153 ரன்களை வாரி வழங்கியுள்ளார். ஆதலால், நாளைய ஆட்டத்தில் ஷைனிக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அல்லது ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேபோல, யஜுவேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நாளைய போட்டியில் முக்கிய சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 18 ஆண்டுகளாக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அகர்கர் வைத்திருந்த சாதனையை நாளை முகமது ஷமி முறியடிக்க முடியும்.

ஒருநாள் போட்டிகளில் தற்போது முகமது ஷமி 79 போட்டிகளில் 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 150 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை ஷமி எட்டுவதற்கு இன்னும் இரு விக்கெட்டுகள் மட்டுமே தேவை. அவ்வாறு எடுத்துவிட்டால் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஷமி பெறுவார்.

இதற்கு முன் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி, 100 போட்டிகளுக்குள் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை 18 ஆண்டுகளாக வைத்திருக்கிறார். அதை ஷமி நாளை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

இது தவிர உலக அளவில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 77 போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும், பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சாக்லின் முஸ்தாக் 79 போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ஷமி நாளை 150 விக்கெட்டுகளை வீழ்த்தினால், உலக அளவில் 3-வது இடத்தைப் பெறுவார்.

SCROLL FOR NEXT