விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் டிஆர்பி சாதனை படைத்த 2-வது ஒருநாள் போட்டி ஒளிபரப்பு

ஐஏஎன்எஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி ஒளிபரப்பு, டிஆர்பி என்று சொல்லப்படும் தொலைக்காட்சி ரசிகர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளது. இதை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் என்கிற சேனல் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்த ஆட்டத்தைப் பார்க்கக் கிட்டத்தட்ட 5,85,000 பேர் ஃபாக்ஸ்டெல் மற்றும் காயோ சேனல்களை நாடியுள்ளனர். முதல் ஒருநாள் போட்டியையும் கிட்டத்தட்ட 4,70,000 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

இதுகுறித்துப் பேசிய ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஸ்டீவ் க்ராலி, "கிரிக்கெட் அவ்வளவு சிறப்பாக இருந்து வருகிறது. பெண்கள் கிரிக்கெட் அணிதான் மிகச் சிறப்பாக விளையாடி வந்தது. தற்போது திறமையான விராட் கோலியின் தலைமையில் இருக்கும் இந்திய அணிக்கு எதிராக ஆண்கள் ஆஸ்திரேலிய அணியும் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. இதைவிடச் சிறப்பாக ஏதாவது இருக்குமா. இந்த சீஸனை ஒருநாள் போட்டியோடு ஆரம்பிக்க வேண்டும் என்கிற திட்டம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குப் பெரிய பலனளித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

அடுத்து டெஸ்ட் தொடரை ஒளிபரப்ப சேனல் 7 தொலைக்காட்சி உரிமம் பெற்றுள்ளது. இது இலவச சேனல். கட்டண சேனலான ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஒருநாள் மற்றும் டி20 ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த இரண்டு சேனல்களிலுமே முதல் டெஸ்ட் போட்டி ஒளிபரப்பப்படும். இது பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதால் இந்த ஏற்பாடு என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT