நேபாள கிரிக்கெட் வீரரும், லெக் ஸ்பின்னருமான சந்தீப் லாமிசானே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள லாமிசானே அதில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் சந்தீப் லாமிசானே இடம் பெற்றிருந்தார். தான் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள விவரத்தை லாமிசானே சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.
லாமிசானே ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ நான் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்களிடம் நேர்மையாகத் தெரிவிக்கிறேன். புதன்கிழமை முதல் எனக்கு உடல்வலி இருந்து வந்தது. இப்போது எனது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் தென்படுகிறது. அனைத்தும் சிறப்பாகச் சென்றால், மீண்டும் களத்துக்கு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணியில் இடம் பெற்ற லாமிசானே ஆடம் ஜம்பாவுடன் சேர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார். மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணியில் சிறப்பாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து லாமிசானே இந்த சீசனுக்கு ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் முதன்முதலில் இடம் பெற்ற நேபாள நாட்டைச் சேர்ந்த வீரர் லாமிசானே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் லாமிசானே இருந்து வருகிறார். ஆனால், கடந்த 13-வது ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட லாமிசானே களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.