நியூஸிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
மழையின் காரணமாக 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 176 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. முதல் ஓவரிலேயே கப்டில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சீஃபர்ட், கான்வே இணை அதிரடியாக ஆட முயன்றனர். சீஃபர்ட் 17 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் பிறகு களமிறங்கிய ஃபிலிப்ஸ் தான் சந்தித்த முதல் ஓவரிலேயே 22 ரன்களைச் சேர்த்து அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூத்த வீரர் ராஸ் டெய்லரும் ரன் சேர்க்காமலேயே ரன் அவுட்டாக, 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து வெற்றி பெறுமா எனச் சந்தேகம் எழுந்தது. ஆனால் நீஷம் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி அணிக்கு நம்பிக்கை சேர்த்தார்.
கான்வேவும் நீஷமும் இணைந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை சமாளித்து, தேவைக்கு அதிகமாகவே ரன் சேர்க்க ஆரம்பித்தனர். வில்லியம்ஸ் வீசிய 10-வது ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி என 23 ரன்கள் கிடைத்தன. 13-வது ஓவரில் கான்வே 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவருக்கு பதிலாக ஆட வந்த சாண்ட்னரும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார்.
ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 10-11 ரன்களுக்கு மேல் சேர்ந்ததால் நியூஸிலாந்து அணி நினைத்ததை விட விரைவாகவே இலக்கை நோக்கி நகர்ந்தது. இதற்கு கீமர் பால் வீசிய 14-வது ஓவர் முக்கியத் துணையாக இருந்தது.
நோபால், வைட் என மொத்தம் 10 பந்துகளை அந்த ஓவரில் கீமர் வீசினார். 14 ரன்கள் சேர்ந்தன. இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் 15-வது ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 11 ரன்களை நியூஸிலாந்து எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவை என்றிருக்க, 2-வது பந்தை சிக்ஸருக்கு அடித்து சாண்ட்னர் ஆட்டத்தை முடித்து வைத்தார்.
முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆட்டம் தொடங்கினாலும் அடுத்தடுத்து மழையால் தடைப்பட்டுக் கொண்டே வந்தது. 10-வது ஓவரின் போது மீண்டும் மழை வந்ததால் ஆட்டம் 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
மே.இ.தீவுகள் அணியின் தொடக்க வீரர் ஃப்ளெட்சர் நம்பிக்கை அளித்தாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. 4 மற்றும் 5-வது ஓவர்களில் ஓவருக்கு 2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. 6-வது ஓவரில் நிக்கலஸ் பூரன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இந்த மூன்று ஓவர்களில் மட்டும் வெறும் 5 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.
இதனால் கேப்டன் பொல்லார்டே முன் நின்று அணிக்கு ரன் சேர்த்துக் கொடுக்க ஆரம்பித்தார். ஐபிஎல் அதிரடியைத் தொடர்ந்த பொல்லார்ட் 37 பந்துகளில் 75 ரன்களைக் குவித்தார். இதில் 8 சிக்ஸர்களும் அடக்கம். அவருக்குத் துணை நின்ற ஆலன் 26 பந்துகளில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஆறு ஓவர்களில் மட்டுமே 84 ரன்கள் சேர்ந்தது. நியூஸிலாந்தின் லாக்கி ஃபெர்க்யூஸன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.