இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 374 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் ஸ்மித், ஃபின்ச் ஆகியோர் சதம் அடித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஒருநாள், டி20, டெஸ்ட் என அடுத்தடுத்துத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் முதலில் ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது.
இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து ஆடி வருகிறது. தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் என இருவரும் ஆரம்பத்தில் மெதுவாக, நிலையாக ஆடி பின் ரன் சேர்ப்பில் வேகமெடுத்தனர்.
இதில் வார்னர் 69 ரன்களில், ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஃபின்ச் மற்றும் ஸ்மித் இந்திய அணியின் பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்டு ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிய ஃபின்ச் 114 ரன்கள் சேர்ந்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த ஸ்டோனிஸ் ஆட்டமிழக்க, ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
மறுமுனையில் நேர்த்தியாக விளையாடிய ஸ்மித் 105 ரன்கள் எடுத்து ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 45 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசினர்.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்திய அணி ஆட்டத்தைத் தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்களை இந்திய அணி தொட்டுள்ளது. களத்தில் கோலியும், தவானும் உள்ளனர்.