இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. ஒரு காலகட்டத்தில் இந்தியா, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டியாக இருந்துள்ளது. குறிப்பாக 1975-ம் ஆண்டு நடந்த முதலாவது உலகக் கோப்பையில் நத்தை வேகத்தில் ரன்களைக் குவித்து எதிரணிகளுக்கு தங்கத் தட்டில் வைத்து வெற்றியை காணிக்கையாக்கி உள்ளது. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் செய்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. முதலாவது உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 174 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்களை மட்டுமே அடித்தார் என்பதுதான் அந்த சா(வே)தனை.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், பலமிக்க இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்களில் (அப்போது ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தது) 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களை சேர்த்தது இங்கிலாந்து. 335 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவாஸ்கரும், ஏக்நாத் சோல்கரும் களம் இறங்கினர். டெஸ்ட் போட்டிகளில் சதங்களாக குவித்துவந்த கவாஸ்கர், இந்தியாவுக்கு அதிரடி தொடக்கம் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கவாஸ்கரோ, ‘டொக்’ வைத்து ஆடி ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தார்.
கவாஸ்கரின் ஆட்டம் மற்ற வீரர்களையும் பாதிக்க, 60 ஓவர்களின் இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை மட்டுமே எடுத்து, 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ‘டொக்’கே பிரதானம் என்று கடைசிவரை அவுட் ஆகாமல் மைதானத்தில் நின்ற கவாஸ்கர், 174 பந்துகளை எதிர்கொண்டு, ஒரேயொரு பவுண்டரியுடன் 36 ரன்களைக் குவித்தார்.