விளையாட்டு

தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: கே.எல்.ராகுல் கருத்து

ஏஎன்ஐ

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் எனப் பல போட்டிகளில் ஆடவுள்ளது. இதை முன்னிட்டு கே.எல்.ராகுல் பேட்டி அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து தோனி பற்றி ராகுலிடம் கேட்கப்பட்டது.

"யாருமே தோனியின் இடத்தை நிரப்ப முடியாது. ஒரு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் எப்படிச் செயல்பட வேண்டும் என்று அவர் கச்சிதமாகச் செய்து காட்டிவிட்டார். சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி வீசலாம் என்பது குறித்து நான் பேசுவேன். இது விக்கெட் கீப்பர்களின் வேலைதான். இதை நான் நியூஸிலாந்து தொடரிலும் செய்திருக்கிறேன்" என்று ராகுல் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் சேர்த்த வீரர் என்கிற பட்டியலில் முதலிடம் பிடித்தவர் ராகுல். பஞ்சாப் அணியைச் சிறப்பாக வழிநடத்தியதோடு ஆரஞ்ச் கோப்பையும் வென்றிருந்தார். தனக்கு வலிமையாக பந்தை அடிக்கும் ஆட்டம் வராது என்றும், ஆனால் அணியின் தேவைக்கேற்ப வேகமாக ரன் சேர்க்கும் திறன் உள்ளது என்றும் ராகுல் கூறியுள்ளார்.

அடுத்த மூன்று வருடங்களில் இந்திய அணி மூன்று விதமான உலகக் கோப்பை தொடர்களில் விளையாடவுள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டு டி20 உலகக் கோப்பை தொடர்கள் மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளது.

இதுகுறித்துக் கேட்டபோது, "ஒரு அணியாக நாங்கள் அவ்வளவு தூரம் திட்டமிடவில்லை. உலகக் கோப்பை தொடர்கள் முக்கியம்தான். எல்லா அணிகளுக்கும் அதுதான் லட்சியமாக இருக்கும். ஆனால், இப்போதைக்கு ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துகிறோம்.

என்னால் தொடர்ந்து நல்ல முறையில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்ய முடியும் என்றால் அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரைக் கொண்டு வரும் வாய்ப்பு இருக்கும். இந்த 3 உலகக் கோப்பைகளிலும் என்னால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் என்றால் எனது நாட்டுக்காக அதைச் செய்வதில் எனக்கு விருப்பமே" என்று கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT