தோனியின் அதிரடி பேட்டிங்கை தனது சிறுவயது முதலே பார்த்து வருவதாக தெரிவித்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாதா, டிவில்லியர்ஸ் அளித்த அறிவுரை தோனியை வீழ்த்த உதவியதாக தெரிவித்தார்.
கடைசி ஓவரை திறம்பட வீசி தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி தேடிக் கொடுத்த ரபாதா தெரிவித்தது: “ஏ.பி. (டிவில்லியர்ஸ்) கூறினார், எம்.எஸ். (தோனி) முழு லெந்த் பந்தை நிச்சயம் அடித்து நொறுக்குவார் என்று, இதனால் அவ்வாறு வீசக்கூடாது என்று திட்டமிட்டோம். இது பெரிய அளவில் கைகொடுத்தது.
பேக் ஆஃப் லெந்த் பந்தை வீசினோம், ஏனெனில் ஆட்டம் நகர நகர அந்த பந்துகளை அடிப்பது கடினமாகிக் கொண்டே வந்தது. இந்தப் பிட்சில் பந்துகள் வரும் வேகம் குறையத் தொடங்கியது.
கடைசி ஓவரில் என்ன செய்ய வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தோம். சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டது உதவி புரிந்தது.
பள்ளி நாட்களிலிருந்தே நான் கடைசி ஓவர்களை வீசி பழக்கப்பட்டுள்ளேன். ஆனால், இது மிகப்பெரிய தருணம், தோனி போன்ற உலகின் தலை சிறந்த வீரருக்கு பந்து வீச வேண்டும். எனவே தெளிவான மனநிலை அவசியம்.
ஏ.பி.டிவில்லியர்ஸ் மற்றும் பிறரின் அறிவுரை உதவியது. இந்தப் போட்டி போல் எனக்கு அதிக அழுத்தம் கொடுத்த போட்டி வேறு எதுவும் இருக்க முடியாது, ஏனெனில் வீரர்களின் பரிமாணம், மற்றும் விளையாடும் கிரிக்கெட்டின் உயரிய நிலை. ரசிகர்கள் ஆரவாரம், பெரிய போட்டி, மிகவும் உணர்ச்சிகரமான கட்டம்”
இவ்வாறு கூறினார் ரபாதா