இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் கேரளா அணி 5-3-2 என்ற பார்மட்டிலும், மும்பை அணி 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆரம்பத்திலேயே மும்பை அணி தாக்குதல் ஆட்டத்தை கையாண்டது.
2-வது நிமிடத்தில் மும்பை ஸ்டிரைக்கர் சோனி நோர்டே, பந்தோடு வேகமாக கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினார். ஆனால் கேரளா பின்கள வீரர் பீட்டர் ரேமேஜ் அதை முறியடித்தார். தொடர்ந்து 4-வது நிமிடத்தில் மும்பையின் கேபிரியேல் கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார். ஆனால் அது கோல் கம்பத்துக்கு மேலே பறக்க அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது.
இதன்பிறகு 11-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை சோனி நோர்டே கோட்டைவிட்டார். 25-வது நிமிடத்தில் மும்பை மிட்பீல்டர் பிரதேஷ் ஷிரோத்கர், கேரளா பின்கள வீரர் வினீத்தை கீழே தள்ளினார். இதையடுத்து கேரளா அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் புருனோ பெரோன் பந்தை உதைத்தார். ஆனால் அதை மும்பை ஸ்டிரைக்கர் சிங்கம் சுபாஷ் அற்புதமாக தகர்க்க, கேரளாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கோலடிக்க தீவிரம் காட்டிய கேரளா, 56-வது நிமிடத்தில் ஸ்டிரைக்கர் மனன்தீப்புக்குப் பதிலாக இஷ்ஃபாக் அஹமதுவை களமிறக்கியது. தொடர்ந்து கேரளா அணி மாற்று வீரர்களை களமிறக்கியும் பலன் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் மும்பை அணிக்கும் கோல் கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
இன்றைய ஆட்டம்
கோவா-சென்னை
இடம்: படோர்டா
நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.