தனது தந்தை முகமது கவுஸுடன் முகமது சிராஜ் : கோப்புப்படம் 
விளையாட்டு

இந்திய அணி வீரர் முகமது சிராஜின் தந்தை காலமானார்: ஆஸி.யில் இருப்பதால் இறுதிச்சடங்கில் பங்கேற்க வாய்ப்பில்லை

பிடிஐ


ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜின் தந்தை நேற்று காலமானார்.

தற்போது சிராஜ் சிட்னியில் இந்திய அணியோடு தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சியில் இருப்பதால், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் உள்ள முகமது சிராஜின் தந்தை முகமது கவுஸ்(வயது53) நேற்று நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். இந்தத் தகவல் உடனடியாக சிராஜுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது சிட்னி நகரில் இந்திய அணியினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அதிலிருந்து சிராஜ் வெளியே வந்து தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பது என்பது கடினமானதாகும்.

இந்திய டெஸ்ட் போட்டிக்கான அணியில் முகமது சிராஜ் இடம் பெற்று பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து தற்போது தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 13-ம் தேதி சிட்னிக்கு வந்த இந்திய அணியினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் காலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கின்றனர். இந்தச் சூழலில் சிராஜ் இந்தியாவுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சிட்னி வந்தால் மறுபடியும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், தந்தையின் இறுதிச்சடங்கில் சிராஜ் பங்ேகற்கமாட்டார் எனத் தெரிகிறது.

சிராஜின் தந்தை மறைந்த செய்தி அறிந்ததும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த துயரமான நேரத்தில் முகமது சிராஜுக்கு பக்கலமாக இருந்து ஆதரவைத் தெரிவிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு முகமது சிராஜ் அளித்துள்ள பேட்டியில் “ இந்த தேசத்தை நீ பெருமைப்படுத்த வேண்டும் மகனே என்றுதான் என் தந்தை எப்போதும் என்னிடம் கூறிவந்தார். அதை நான் உறுதியாகச் செய்வேன். நான் இந்த நிலைக்கு உயர்வதற்காக என் தந்தை சிறுவயதில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டி என்னை படிக்கவைத்து ஆளாக்கினார்.

என் தந்தையின் மறைவுச் செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. என் கனவுக்கும், வாழ்க்கைக்கு பக்கபலமாக என் தந்தை இருந்தார். நான் இந்திய அணிக்காக விளையாடுவது என் தந்தையின் கனவாக இருந்தது. நான் அவரின் கனவை நனவாக்கியதை நினைத்து பெருமையாக இருக்கிறது.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் என் தந்தையின் இறப்புச் செய்தியை தெரிவித்தார்கள். துணிச்சலாக இரு, மனவலிமையோடு இரு எங்கள் ஆதரவு உண்டு” எனத் தெரிவித்தனர்.

ஆர்சிபி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தியில் “ முகமது சிராஜ் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள், பிரார்த்தனைகளைத் தெரிவிக்கிறோம். ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த கடினமான நேரத்தில் உங்களுடன் இருப்போம். வலிமையோடு இருங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT