தன்னை 10 கோடி ரூபாய் சியர் லீடர் என்று சாடிய இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்குக்கு, ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் பதிலளித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் க்ளென் மேக்ஸ்வெல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13 போட்டிகளில் வெறும் 108 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். சராசரி 15.42 மட்டுமே. இவரை ரூ.10 கோடி கொடுத்து அந்த அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், "க்ளென் மேக்ஸ்வெல் 10 கோடி ரூபாய் சியர் லீடர். பஞ்சாப்புக்கு மிகப்பெரிய சுமையாகிப் போனார். கடந்த சில வருடங்களாகவே இவரது ஆட்டம் சுமாராக மாறிவிட்டது. இந்த முறை அதைக் காட்டிலும் சுமாராக ஆடி சாதனை படைத்துள்ளார். எக்கச்சக்க சம்பளத்துடன் விடுமுறைக் கொண்டாட்டம் என்று இதைத்தான் சொல்வார்கள்" என்று கடுமையாகச் சாடியிருந்தார்.
இதுகுறித்துப் பதிலளித்திருக்கும் மேக்ஸ்வெல், "பரவாயில்லை. என் மீதான வெறுப்பை சேவாக் வெளிப்படையாகவே பேசியுள்ளார். அவருக்குப் பிடித்த விஷயத்தைப் பேச அவருக்கு உரிமை உண்டு. இப்படியான கருத்துகளால்தான் அவர் ஊடக வெளிச்சத்தில் இருக்கிறார். எனவே, இது பரவாயில்லை. இதை நான் கடந்து வந்துவிடுவேன்.
இதுபோன்ற விஷயங்களைக் கையாள தற்போது நான் மேம்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். எதிர்காலத்தை மனதில் வைத்துப் பார்த்தால் இதுபோன்ற விஷயங்களை நான் கடந்து வந்தது நல்லதே என நினைக்கிறேன். எதிர்மறையான விஷயங்களுக்கு எதிராக என்னால் சற்று தயார் செய்துகொள்ள முடிந்தது. இந்த வருடமே மிகப்பெரிய சோதனைக் காலமாக இருந்திருக்கிறது" என்று பேசியுள்ளார்.
முன்னதாக மேக்ஸ்வெல், மனநலப் பிரச்சினைகள் காரணமாக 2-3 மாதங்கள் ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகி ஓய்விலிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஓய்வுக்குப் பிறகே ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் பங்கேற்றிருந்தார்.