கோப்புப் படம் 
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அமைப்பில் மாற்றம்: 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட இந்தியா

செய்திப்பிரிவு

உலக டெஸ்ட் சாமியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி தொடங்கியது. இதில் டெஸ்ட் விளையாட தகுதி பெற்றிருக்கும் 9 அணிகள் மோதும். ஒரு அணி 6 அணிகளுடன் இதில் டெஸ்ட் தொடர்களில் விளையாடும். இந்த ஆறு தொடர்களில் மூன்று சொந்த மண்ணிலும், மூன்று அந்நிய மண்ணிலும் நடக்கும். ஒவ்வொரு தொடரின் முடிவிலும் அதிகபட்சமாக 120 புள்ளிகள் வரை எடுக்க முடியும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இந்தத் தொடர்கள் நடந்து முடிந்து இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும்.

ஆனால் கரோனா நெருக்கடியால் திட்டமிட்டபடி இம்முறை இந்தப் போட்டிகளை நடத்த முடியவில்லை என்பதால், அணிகளுக்கு புள்ளிகள் அளிக்கும் விதத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனென்றால் கரோனா பிரச்சினை காரணமாக ஒரு அணியால் விளையாட முடியாமல் போனால் அது அந்த அணிக்குப் பின்னடைவாக இருக்கக் கூடாது என்கிற அடிப்படையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தலைமையிலான குழு இந்த மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது. இதில் ஒட்டுமொத்தப் புள்ளிகள் என்ற அடிப்படையில் இல்லாமல், ஒட்டுமொத்தமாக எத்தனை போட்டிகளை அந்த அணி ஆடியுள்ளது என்பதை வைத்துப் புள்ளிகள் தரப்பட்டுள்ளது. எனவே முதலிடத்தில் இருந்த இந்தியா 75 சதவித மதிப்பெண்ணுடன், 360 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 82.2 சதவித மற்றும் 296 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது.

இன்னொரு பக்கம், சர்வதேச மகளிர் டி20 உலகக் கோப்பையை 2022ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 2023ஆம் ஆண்டுக்கு ஐசிசி ஒத்தி வைத்துள்ளது. 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளதால் அதை மனதில் வைத்தே இந்த மாற்றம் என கவுன்சில் அறிவித்துள்ளது. ஏற்கனவே மகளிர் உலகக் கோப்பை 2021ஆம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT