விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: பொறுமையை சோதித்த டென்னிஸ் போட்டி

பி.எம்.சுதிர்

டென்னிஸ் போட்டிகள் பொதுவாக 3 மணிநேரம் வரை நடக்கும். ஆடவர்கள் இடையிலான போட்டி சில சமயம் 4 மணிநேரம் வரை இழுக்கும். ஆனால் விம்பிள்டனில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த டென்னிஸ் போட்டி, இந்த நேரக் கணக்கையெல்லாம் கடந்து சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்காவின் ஜான் இஸ்னர், பிரான்ஸ் நாட்டின் நிகோலஸ் மகுத் இடையே நடந்த இந்த டென்னிஸ் போட்டி, 11 மணிநேரம் 5 நிமிடங்களுக்கு நீடித்து ரசிகர்களின் பொறுமையைச் சோதித்துள்ளது.

2010-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜூன் 24-ம் தேதி இந்த நீண்ட டென்னிஸ் யுத்தம் தொடங்கியது. முதல் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் போட்டி முடியாததால் 2-வது நாளிலும், அன்றும் முடியாததால் 3-வது நாளிலும் போட்டி தொடர்ந்தது. இறுதியில் 6-4, 3-6, 6-7(7), 7-6(3), 70-68 என்ற புள்ளிக்கணக்கில் ஜான் இஸ்னர் வெற்றி பெற்றார்.

இந்த நீண்ட நெடிய டென்னிஸ் போட்டியில், கடைசி செட் ஆட்டம் மட்டும் 8 மணிநேரம் 11 நிமிடங்களுக்கு நீடித்தது. இப்போட்டியில் ஆடியதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள இஸ்னர், “தான் ஒரு மிகச்சிறந்த போராளி என்பதை இப்போட்டியின் மூலம் மகுத் எடுத்துக் காட்டியுள்ளார். உண்மையில் இந்த போட்டியை இத்தனை தூரம் எடுத்து வந்திருப்பதன் மூலம் மகுத்தும் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த முறை சந்திக்கும்போது அவரை குறுகிய நேரத்தில் வெற்றிகொள்ள முயல்வேன்” என்று கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு இதே வீரர்கள் மீண்டும் விம்பிள்டனில் சந்தித்துள்ளனர். அப்போது ஏற்கெனவே வாக்களித்தபடி 3 மணி நேரத்துக்குள் இஸ்னர் 7-6(4), 6-2, 7-6(6) என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

SCROLL FOR NEXT