இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகி முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக்கில் அவர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
33 வயதான தியாகி 17 வயதில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார். இந்திய அணிக்காக 4 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியிருக்கிறார்.
41 முதல் தர ஆட்டங்களை ஆடியிருக்கும் தியாகி 109 விக்கெட்டுகளைத் தனது 10 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் எடுத்திருக்கிறார். தோள்பட்டை மற்றும் கணுக்கால் காயங்களால் இவரது வாய்ப்புகள் பாதிக்கப்பட்டன.
"இந்தியாவுக்காக ஆடியதில் நான் என்றும் நன்றியுடன், பெருமையுடன் இருப்பேன். எனது பயணத்தில் பலர் எனக்கு உதவியிருக்கின்றனர். எனது முதல் ரஞ்சிக் கோப்பையின் கேப்டன் முகமது கைஃப்புக்கு என் முதல் நன்றி. அவர் என்னை அதிகம் ஊக்கப்படுத்தினார். சுரேஷ் ரெய்னாவுக்கும் நன்றி. அவரைப் பார்த்துதான் நான் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன். அவரும் என்னைப் போல காஸியாபாத்திலிருந்து வந்தவர். எனது சர்வதேச கிரிக்கெட்டை நான் தோனியின் தலைமையில்தான் ஆடினேன். அவர் எனக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுத்தார். அவருக்கும் என் நன்றி.
அடுத்தடுத்து எனக்குக் காயங்கள் ஏற்பட்டன. இதனால் 2.5 - 3 வருடங்கள் என்னால் ஆட முடியவில்லை. முதலில் தோள்பட்டை, அதற்குப் பிறகு கணுக்கால், முதுகு எனக் காயம் ஏற்பட்டது. என் கிரிக்கெட் வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் எனக்குக் காயங்கள் பட்டன. காயம் ஏற்படுவது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். அதையே காரணமாகச் சொல்ல முடியாது என்றாலும், காயங்கள் இல்லையென்றால் இந்தியாவுக்காக நான் இன்னும் நிறைய ஆடியிருக்கலாம்.
இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவதற்குக் கடுமையான போட்டி இருக்கிறது. காயங்கள் நமக்குப் பின்னடைவைத் தரும். நான் அடுத்தடுத்த காயங்களால் சில வருடங்களைத் தொலைத்தேன். ஆனாலும், எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. லங்கா ப்ரீமியர் லீக் வரவிருக்கிறது. ஆனால், இன்னும் முடிவாகவில்லை" என்று தியாகி கூறியுள்ளார்.
லங்கா ப்ரீமியர் லீக்கில் தியாகி விளையாடுவது உறுதியானால், இர்ஃபான் பதான், முனாஃப் படேல், மன்ப்ரீத் கோனி ஆகியோருடன் சேர்த்து இந்தியாவிலிருந்து விளையாடும் நான்காவது வீரராக தியாகி இருப்பார்.