ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வாழ்வாதாரத்துக்காக உணவு டெலிவரி செய்யும் பணியாளராக வேலை செய்கிறார்.
வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரூபென் லிமார்டோ கேஸ்கன், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வாள்வீச்சுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர். வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஒருவர் பதக்கம் வென்றது ஒலிம்பிக் வரலாற்றில் அது இரண்டாவது முறை மட்டுமே. போலந்து நாட்டில் வாள்வீச்சுப் போட்டிக்கென ஒரு பாரம்பரியம் இருப்பதால் இளம் வயதிலேயே அங்கு குடிபெயர்ந்துவிட்டார் ரூபென். தற்போது தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்பவராகப் பணியாற்றி வருகிறார். இன்னொரு பக்கம் டோக்கியோவில் நடக்கவிருக்கும் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கும் தயாராகி வருகிறார்.
ஒவ்வொரு நாள் தீவிரமான பயிற்சிக்குப் பிறகும் ஊபர் ஈட்ஸ் வேலையைச் செய்து வரும் ரூபெனுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது நிலவும் கரோனா நெருக்கடியால் இவருக்கு எங்கிருந்தும் பயிற்சிக்கான பண உதவி கிடைக்கவில்லை. ஆனாலும் தனது பயிற்சிக்கு நேரம் ஒதுக்கும் அளவு சரியான வேலை கிடைத்ததில், அதுவும் இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
முகக் கவசத்துடனேயே இருப்பதால் இவரைப் பலரால் அடையாளம் காண முடிவதில்லை. ஒரு சிலர் அடையாளம் கண்டு செல்ஃபி எடுத்துக் கொள்வதும் உண்டு.
"இப்போது ஸ்பான்சர்களே கிடைப்பதில்லை. ஏனென்றால் போட்டிகளே இல்லை. ஆனால், என் குடும்பத்தை ஆதரிக்க நான் சம்பாதித்தாக வேண்டும். டோக்கியோவில் பல பதக்கங்களை வெல்ல வேண்டும். எனக்காக, என் நாட்டுக்காக, நான் இந்த விளையாட்டை விட்டுப் போக விரும்பவில்லை. ஏனென்றால் எனக்கு இன்னும் கனவு உள்ளது. நான் எங்கு சென்றாலும் என் நாட்டின் கொடியை 100 சதவீதம் உணர்ச்சி பொங்க, பெருமிதத்துடன் உயர்த்திப் பிடிப்பேன்" என்று கூறுகிறார் ரூபென்.