பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி: கோப்புப் படம். 
விளையாட்டு

2021 ஐபிஎல் தொடரில் 9-வது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்: நடிகர் மோகன்லால், சல்மான்கான் விருப்பம்? எங்கிருந்து வர வாய்ப்பு?

செய்திப்பிரிவு

2021-ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் டி20 தொடரில் 9-வது அணியைச் சேர்க்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9-வது அணியை வாங்கும் முயற்சியில் பாலிவுட் நடிகர் சல்மான்கான், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் விருப்பமாக இருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதற்கிடையே அந்த அணி குஜராத் மாநிலம், அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்டு அமையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13-வது ஐபிஎல் சீசன் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ரசிகர்கள் யாருமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 6 மாதங்களில் அதாவது 2021 ஏப்ரல் - மே மாதங்களில் 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

தற்போது ஐபிஎல் டி20 தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் 9-வது அணியைச் சேர்ப்பதற்கு பல்வேறு தரப்பிலும் பிசிசிஐக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இதில் பாலிவுட் நடிகர் சல்மான்கான், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரும் அணியை வாங்குவதற்கு விருப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஐபிஎல் இறுதி ஆட்டத்தைக் காண வந்திருந்த நடிகர் மோகன்லால்

ஏற்கெனவே நடிகை ப்ரீத்தி ஜிந்தா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்து, அணியை நடத்தி வருகிறார். கொல்கத்தா அணியை நடிகர் ஷாருக்கான், ஜூஹி சாவ்லா இணைந்து நடத்தி வருகின்றனர்.

இதுபோல் 9-வது அணியை சல்மான்கான், மோகன்லாலும் வாங்க விருப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பைஜூஸ் கல்வி ஆப்ஸ் நிறுவனம் சார்பில் அணியை வாங்கும் பேச்சுவார்த்தை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகத்தான் ஐபிஎல் இறுதிப்போட்டியைக் காண மோகன்லால் துபாய் வந்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே டாடா நிறுவனம், அதானி குழுமம் ஆகியவையும் புதிய அணியை வாங்க விருப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "குஜராத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மைதானத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் அகமதாபாத்தைத் தலைமையாகக் கொண்டு ஒரு அணிவரக்கூடும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே குஜராத் லயன்ஸ் அணி இருந்த நிலையில், 8 அணிகளாகக் குறைக்கப்படும்போது விலக்கியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கேரளாவை அடிப்படையாகக் கொண்டு கொச்சி டஸ்கர்ஸ் என்ற அணி ஐபிஎல் தொடரில் இருந்தது. ஆனால், பங்குதாரர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அணி ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது .

2021-ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஆரம்பக்கட்டப் பணியை பிசிசிஐ கவனிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் போதுமான வருமானக் குறைவு, விளம்பரதாரர்களிடம் இழப்பு என பிசிசிஐ பல்வேறு நிதி நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.

இதை ஈடுகட்டும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி பிப்ரவரி மாதத்தில் புதிய அணி சேர்ப்பது குறித்த முடிவும், மிகப்பெரிய அளவில் வீரர்கள் ஏலம் நடத்தும் அறிவிப்பும் இருக்கும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT