சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கு சச்சின் டெண்டுல்கர், மற்றும் தோனி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
விக்கெட்டுகள் அடிப்படையில் கபில்தேவுக்குப் பிறகு 2-வது சிறந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரை எடுத்தவர் ஜாகீர். கபில் 434 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார், கடைசி ஒருநாள் போட்டி 3 ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கைக்கு எதிராக பல்லகிலே மைதானத்தில் ஆடியது.
அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 610 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது செய்தியில், “எனக்குத் தெரிந்த வரையில் அலட்டிக் கொள்ளாத ஒரு பவுலர் ஜாகீர். பேட்ஸ்மென்களின் எண்ணத்தை முன் கூட்டியே உணர்ந்து பல சமயங்களில் அவர்களது சிந்தனையை தனது பந்துவீச்சினால் முறியடிப்பவர் ஜாகீர். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தையும் இவர் சிறப்பாகத் தொடங்குவார் என்றே எதிர்பார்க்கிறேன். மிகச்சிறந்த ஓய்வு வாழ்க்கையை ஜாகீர் கொண்டாட வாழ்த்துக்கள்” என்றார்.
ஒருநாள் கேப்டன் தோனி கூறும்போது, “ஒரு அருமையான கிரிக்கெட் வாழ்க்கை ஜாகீருடையது, வெல் டன் ஜாகீர். இந்திய கிரிக்கெட் அணி நீங்கள் இல்லாவிட்டால் சாதனைகளை நிகழ்த்தியிருக்க முடியாது. எனக்குத் தெரிந்த அளவில் புத்திகூர்மை மிகுந்த பவுலர். வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. உங்களால் இன்னும் கூட இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த விதத்தில் பங்களிப்பு செய்ய முடியும். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சச்சின் பேஸ்புக்கிலும், தோனி ட்விட்டரிலும் இதனை தெரிவித்தனர்.