துபாயில் ஐபிஎல் 2020 தொடர் இடையூறின்றி முழு தொடரும் சிறப்பாக நடைபெற்றதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி வீரர்கள் அனைவருக்கும் தன் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
செவ்வாயன்று ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் ஆக முடிந்தது, டெல்லி ரன்னர் கோப்பையை வென்றது. மும்பை தன் 5வது சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் கடினமான ஒரு சூழ்நிலையில் ஐபிஎல் வீரர்களின் ஒத்துழைப்பின்றி நடந்திருக்காது என்பதை அங்கீகரித்தத் தலைவர் கங்குலி தன் ட்விட்டர் பக்கத்தில், “பிசிசிஐ சார்பாகவும் அலுவலர்கள் சார்பாகவும் ஐபிஎல் அணிகளின் ஒவ்வொரு வீரருக்கும் நான் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதுவும் பயோ-பப்பிள் எனும் தனிமைப்படுத்தலில் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பது மனதிற்கு விடப்படும் சவால் ஆகும். இதனைக் கடந்து தொடரை வெற்றி பெறச் செய்தீர்கள்.
உங்களது கடமையுணர்வுதான் இந்திய கிரிக்கெட் இப்போது இருக்கும் நல்ல நிலமைக்குக் காரணம்” என்று ட்வீட் செய்தார்.
பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கங்குலியின் உணர்வைப் பிரதிபலித்து, “வாழ்த்துக்கள் டீம் ஐபிஎல், கங்குலி, ஜெய்ஷா ஆகியோரது ஆற்றல்பூர்வ வழிநடத்துத் தலைமையில் சவாலான காலக்கட்டத்தில் தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது, அன்பையும் ஆதரவையும் அளித்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய நன்றி.
உங்களை நாங்கள் உள்ளபடியே இழந்தோம், ஐபிஎல் 2021-ல் நீங்கள் மீண்டும் பெரும் சப்தத்துடன் வருவீர்கள் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
கோவிட் 19 காலத்தில் இவ்வளவு நீண்ட ஒரு தொடரை சர்ச்சை எதுவும் இல்லாமல் நடத்தியதில் கிரிக்கெட் அரங்கில் பிசிசிஐ மதிப்பை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.