விளையாட்டு

ஒலிம்பிக் நாயகன் மைக்கேல் பெல்ப்ஸ்

செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைக் குவித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ். 5 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இவர், வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 28. அதில் தங்கப் பதக்கங்கள் மட்டும் 23. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளில் 46 நாடுகள் மட்டுமே இதுவரை மொத்தமாக இத்தனை பதக்கங்களை வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அளவுக்கு புகழ்பெற்ற விளையாட்டு வீரரான மைக்கேல் பெல்ப்ஸ், சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போல் இல்லை. அதிக துறுதுறுப்புடன் இருந்த அவர், படிப்பில் மந்தமாக இருந்துள்ளார். இதனால் கவலையடைந்த அவரது அம்மா, மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர் பரிசோதனை செய்ததில், அவர் கவனச் சிதறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த நோய் குணமாக, மருந்துகளை அளிப்பதுடன், அவரை நீச்சலில் ஈடுபடுத்துமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்படித்தான் பெல்ப்ஸுக்கு நீச்சல் அறிமுகமானது.

ஆரம்பத்தில் நீச்சல் குளத்தில் இறங்கவே பயப்படும் சிறுவனாக பெல்ப்ஸ் இருந்துள்ளார். “தண்ணீருக்குள் முகம் புதைக்க பயந்ததால் முதலில் பேக் ஸ்ட்ரோக் (மல்லாந்து படுத்த நிலையில் நீச்சல் அடிப்பது) முறை நீச்சலில் பயிற்சி பெற்றேன். அதன் பிறகுதான் மற்ற நீச்சல்களில் கவனம் செலுத்தினேன்” என்கிறார் பெல்ப்ஸ். இதன் பிறகு நீச்சலே அவரது வாழ்க்கையாகிப் போனது.

ஒன்றுக்கும் உதவாத குழந்தை என்ற நிலையில் இருந்து வளர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ், இன்று ரூ.3,500 கோடிக்கு சொந்தக்காரர். “தினமும் இரவு 8 மணிநேர தூக்கம். பகலில் 6 மணிநேர நீச்சல் பயிற்சி, மதியம் 3 மணிநேர தூக்கம். எப்போதும் அடுத்த லட்சியத்தைப் பற்றியேசிந்தனை. அதுதான் என் வெற்றியின் ரகசியம்” என்கிறார் மைக்கேல் பெல்ப்ஸ்.

SCROLL FOR NEXT