சச்சின் டெண்டுல்கர் தனது அபரிதமான திறமைகளுக்கு நியாயம் செய்யவில்லை, அவர் முச்சதம், நாற்சதங்களை எடுத்திருக்க முடியும் ஆனால் அவரால் முடியவில்லை என்று உலகக் கோப்பை வென்ற இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் கபில் தேவ் கூறியுள்ளார்.
கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் கபிலை மேற்கோள் காட்டி வெளியான செய்தி வருமாறு: "என்னை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தனது திறமைக்கு சச்சின் நியாயம் செய்யவில்லை. அவர் செய்ததைக் காட்டிலும் இன்னும் கூட அதிகமாக சாதித்திருக்க முடியும் என்றே நான் எப்போதும் கருதுகிறேன்.
அவர் மும்பை வகையறா கிரிக்கெட்டில் தேங்கி விட்டார். கருணை காட்டாத சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர் தன்னை அவரது திறமைக்கேற்ப ஈடுபடுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. துல்லியமாகவும், நேராகவும் ஆடும் மும்பை வீரர்களுடன் அவர் செலவிட்டதை விட விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றவர்களுடன் அவர் நிறைய நேரம் செலவிட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அதாவது சதங்கள் எடுப்பது எப்படி என்பதை அறிந்துள்ள வீரர்கள் வகையில் அவர் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்கிறார். ஆனால் அதனை இரட்டைச் சதமாக, முச்சதமாக, ஏன் 400 ரன்களாக அவரால் மாற்ற முடியவில்லை.
சச்சினிடம் திறமை இருந்தது. உத்தி ரீதியாக வலிமையானவர், ஆனால் அவர் சதமெடுக்கவே இருந்ததாக தெரிகிறது. ரிச்சர்ட்ஸ் போல் அல்லாமல் இவர் கருணையற்ற ஒரு பேட்ஸ்மெனாக இல்லை, துல்லியமான, சரியான ஒரு பேட்ஸ்மேனாகவே இருந்தார். நான் அவருடன் நிறைய பேசியிருந்தால், நிச்சயம் அவரிடம் கூறியிருப்பேன், ‘இன்னும் மகிழ்ச்சியுடன் ஆடு, சேவாக் போல் விளையாடு’ என்று கூறியிருப்பேன், என்றார்.
துபாயில் உள்ள ஜுமெய்ரா ஹோட்டலில் உள்ள கோவ் கடற்கரை கிளப்பில் கபில் இதனை தெரிவித்தார். ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், இயன் போத்தம் ஆகியோரும் இருந்தனர்.
ஆனால் ஷேன் வார்ன் கூறும்போது, “சச்சின் ஒரு ஆச்சரியமான வீரர். எனது 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் நான் எதிர்த்து விளையாடிய பேட்ஸ்மென்களில் சச்சினே சிறந்தவர். அவர் மீதிருந்த எதிர்பார்ப்பு, வேகப்பந்து வீச்சு, ஸ்பின் இரண்டுக்கும் எதிரான அவரது திறமை, பந்துகளை அவர் கணிக்கும் விதம் என்று கிரிக்கெட் ஆட்டத்தின் மிகப்பெரிய வீரர் சச்சின், மிகச்சிறந்த வீரர் சச்சின்.
90-களின் நடுப்பகுதியில் பவுலர்களை ஆதிக்கம் செலுத்தினார். எந்த ஒரு வீச்சாளருக்கு எதிராகவும் அவரது திறமை ஈடு இணையற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகச்சிறப்பாக ஆடியவரும் சச்சினே.
இப்போது சச்சினின் வேறொரு பக்கத்தை பார்க்கிறேன், அவருடன் நான் வர்த்தகம் செய்து வருகிறேன். அவர் ஒரு சிறந்த நண்பர்” என்றார்.
வாசிம் அக்ரம் கூறும்போது, “எனக்கும் வக்கார் யூனுஸுக்கும் ஒரு மிகப்பெரிய வருத்தமென்னவெனில் டெண்டுல்கருக்கு எதிராக 10 ஆண்டுகள் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட முடியாமல் போனதுதான். 1989-ல் அறிமுக காலத்தில் விளையாடினோம் அதன் பிறகு 1999-ல்தான் ஆடினோம். வார்ன் கூறியது போல் ஆட்டத்தின் சிறந்த வீரர் அவர், 100 சர்வதேச சதங்கள் அவருக்காக பக்கம் பக்கமாக பேசும்” என்றார்.
தாங்கள் பந்து வீசியதில் சிறந்த பேட்ஸ்மென் யார் என்ற கேள்விக்கு, விவ் ரிச்சர்ட்ஸ் என்றார் கபில்தேவ், போத்தமும் அதையே கூறினார். அதாவது ஆஃப் திசையில் பீல்டர்களைக் குவித்து வீசினால் அவர் லெக் திசையில் கிராண்ட் ஸ்டாண்டுக்கு சிக்ஸ் அடிப்பார் என்றார் போத்தம்.
வாசிம் அக்ரம் கூறும்போது, “நான் தொடங்கும் போது விவ் ரிச்சர்ட்ஸ், மற்றும் சுனில் கவாஸ்கர். நான் கவாஸ்கரை ஒரேயொரு முறை வீழ்த்தியுள்ளேன். 90களில் சச்சின் மற்றும் பிரையன் லாரா” என்றார்.